தேர்தல் வெற்றிமுக பயணத்தின் தொடக்கமாக திருச்சியில் மார்ச் 14ம் தேதி திமுக மாநில மாநாடு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

உத்தமபாளையம்: தேர்தல் வெற்றிமுக பயணத்தின் தொடக்கமாக மார்ச் 14ம் தேதி திமுகவின் 11வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெறும் என்று தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் ‘‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் பேசியதாவது: உங்களின் நீண்டகால பிரச்னைகளை என்னால் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையோடு வந்துள்ள பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் 3 மாதத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன், உங்களது கோரிக்கைகளுக்கு நிச்சயம் தீர்வு காணப்படும். மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ் இப்பகுதிக்கு எதுவும் செய்யவில்லை. பெரியாறு பிரச்னையில் நமது உரிமை நிலை நாட்டப்படவில்லை. பி.டி.ஆர் கால்வாய் விரிவாக்கப்படவில்லை. கிராம பஞ்சாயத்துகளில் அடிப்படை வசதி செய்யப்படவில்லை.

கொட்டக்குடி ஆற்றில் தடுப்பணை கட்டப்படவில்லை. நியூட்ரினோ திட்டத்தால் ஏற்பட்ட அச்சத்தை தீர்க்கவில்லை. ஓபிஎஸ்சுக்கு இருமுறை முதல்வர் பதவி கொடுத்த ஜெயலலிதாவுக்கும், மூன்றாவது முறை முதல்வர் பதவி கொடுத்த சசிகலாவுக்கும், அவர் உண்மையாக இல்லை. தற்போதைய முதல்வர் பழனிசாமிக்கும் உண்மையாக இல்லை. இப்போது அயோத்தியில் பரதன் என விளம்பரம் கொடுக்கிறார். ராமன், பரதன் என போட்டால்தான் பாஜவுக்கு புரியும் என விளம்பரம் கொடுக்கிறார். அயோத்தி பற்றி பேச இவருக்கு தகுதி இல்லை. பகல் வேஷம் போடும் பன்னீர்செல்வம் பரதன் பற்றி உச்சரிக்கலாமா. கூனியின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் பன்னீர்செல்வம். தியானம் செய்து ஆவியோடு பேசியது யார்/ தர்மயுத்தம் நடத்தியது யார். அதனை வாபஸ் பெற்று எடப்பாடியோடு கை கோர்த்துவிட்டார்.

ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளது என கூறியவர் ஓ.பன்னீர்செல்வம். அனைவரும் மருத்துவமனையில்தானே இருந்தார்கள். இவர்களுக்கு தெரியாமல் என்ன நடந்திருக்கும். சசிகலா, இளவரசி சொத்துக்கள் முடக்கப்படுகிறது. அவர்களுக்கு வசூல் செய்து கொடுத்தவர்கள் பன்னீரும், எடப்பாடியும்தான். ஓபிஎஸ் செல்வாக்கு மூலம் அவரது தம்பி, மகன் செய்த ஊழல்கள் ஏராளம். கைலாசநாதர் கோயில் பூசாரி தற்கொலை மர்மம், லட்சுமிபுரம் கிணறு பிரச்னை, சட்டவிரோத மணல் கொள்ளை, தெருவிளக்கு ஊழல், பினாமி கான்ட்ராக்ட் என எவ்வளவு கொள்ளைகள். அமெரிக்க நிறுவனமே ஓபிஎஸ்சுக்கு பணம் கொடுத்தது. ஊழல் முகத்தை மறைக்கவே, ஓபிஎஸ் பரதன் வேஷம் போடுகிறார். தேர்தல் வெற்றிமுக பயணத்தின் தொடக்கமாக மார்ச் 14ல் திருச்சியில் 11வது திமுக மாநில மாநாடு நடத்தப்படும் என்றார்.

* ஓபிஎஸ் சொத்துகுவிப்பு பற்றி விசாரணை நடத்தப்படும்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 2002, மார்ச் 7ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஓபிஎஸ்சுக்கு எழுதிய  கடிதத்தில், மந்தமான செயல்பாடு என தெரிவித்துள்ளார். 2001ல் ஓபிஎஸ் சொத்து மதிப்பு 17 லட்சத்து 44 ஆயிரத்து 840 ரூபாய். 5 ஆண்டுகள் கழித்து அவர் கணக்கு காட்டியது ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய். இந்த சொத்துக்குவிப்பு தொடர்பாக ஓபிஎஸ் மீது, நாங்கள் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இன்று அவரது சொத்து மதிப்பு ரூ900 கோடி. திமுக ஆட்சி அமைந்தவுடன் அவரது சொத்து குவிப்பு குறித்து விசாரிக்கப்படும் என்றார்.

2,000 பேர் சேர்ந்தனர்: மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் நிகழ்ச்சி, தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் நேற்று நடந்தது. டி.வாடிப்பட்டி ஊராட்சி தலைவர் தங்கராஜ், அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். இதேபோல மக்கள் நீதி மையம் போடி நகர நிர்வாகி அய்யப்பன், ரஜினி மக்கள் மன்றம் போடி நகர இளைஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகி ராஜ்குமார் உள்பட 2 ஆயிரம் பேர் மாற்று கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

Related Stories:

>