×

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 26ல் லாரிகள் ஸ்டிரைக்: மார்ச் 15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; தென்மாநில உரிமையாளர் நலச்சங்கம் அறிவிப்பு

சேலம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் வரும் 26ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடக்கிறது. இதையடுத்து மார்ச் 15 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக, தென் மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சண்முகப்பா தெரிவித்துள்ளார். தென்மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்க கூட்டமைப்பின் கூட்டம் சேலத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் தென்மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சண்முகப்பா அளித்த பேட்டி: பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. இந்தியாவிலுள்ள 18 மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த வரியை குறைக்க வேண்டும். 15 ஆண்டு பழமையான வாகனங்களை அழிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவால் 6லட்சம் வாகனங்கள் பாதிக்கப்படும். 2005 முதல் சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை நிறுத்த வேண்டும். அதேபோல் பாஸ்டேக் முறையினால் வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுங்கச்சாவடிகளில் தனியாக பணம் செலுத்தும் ஒரு வழியை ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசு டீசல் விலையை குறைக்கவும், மாநில அரசு வாட் வரியை குறைக்கவும் 15 நாட்கள் கெடு விதிக்கப்படும். அரசுகளின் கவனத்தை ஈர்க்க, வரும் 26ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். அதன்பிறகு பெங்களூருவில் நடைபெறும் மாநாட்டில், வரும் மார்ச் 15ம்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்வோம்.

15 ஆண்டுகளான வாகனங்கள் என்பதை 20 ஆண்டாக உயர்த்தாவிட்டால் பல லட்சம் லாரி தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள்.  எங்களது வேலைநிறுத்த போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் மட்டுமல்ல, வணிகர்கள், விவசாயிகள், தொழிற்சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்க உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு வரும் தேர்தலிலும் எதிரொலிக்கும். விலை உயர்வால் பாமர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் ஓமலூர் சுங்க சாவடி, சென்னையில் ஒரு சுங்கச்சாவடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவோம். மத்திய அமைச்சர் மாற்று வாகனத்தை பயன்படுத்துங்கள் என்று கூறியுள்ளார். அதுபோன்ற வாகனங்களை கண்டுபிடித்து கொடுத்தால் ஓட்ட தயாராக உள்ளோம். வேலை நிறுத்த போராட்டத்தில் தென் மாநிலங்களில் மட்டும் 26 லட்சம் வாகனங்கள் பங்கேற்க உள்ளது. இவ்வாறு சண்முகப்பா கூறினார்.

* 15 ஆண்டு பழமையான வாகனங்களை அழிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவால் 6 லட்சம் வாகனங்கள் பாதிக்கப்படும்.
* சேலம் ஓமலூர் சுங்க சாவடி, சென்னையில் ஒரு சுங்கச்சாவடி அகற்ற லாரி உரிமையாளர்கள் வலிறுத்தி உள்ளனர்
* வேலை நிறுத்த போராட்டத்தில் தென் மாநிலங்களில் மட்டும் 26 லட்சம் வாகனங்கள் பங்கேற்க உள்ளன.


Tags : states ,strike ,Tamil Nadu ,Southern Owners' Union , Trucks strike in 26 of 6 states, including Tamil Nadu, over petrol and diesel price hike: indefinite strike from March 15; Notice of the Southern Owners' Union
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து