×

புதுவையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு 22ல் பெரும்பான்மையை நிரூபிக்க கெடு: புதிய கவர்னராக பொறுப்பேற்றவுடன் தமிழிசை உத்தரவு

புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு வரும் 22ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று புதுவை கவர்னராக பொறுப்பேற்றதும் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி, 15 எம்எல்ஏக்களுடன், திமுக 3 மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினர் ஆதரவுடன் நடந்து வந்தது. இந்நிலையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் எம்எல்ஏக்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். மேலும் எம்எல்ஏ தனவேல் பதவிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், காங்கிரஸ் கூட்டணியின் பலம் 14 ஆக குறைந்தது.

எதிர்க்கட்சி வரிசையில் என்ஆர் காங்கிரஸ் 7, அதிமுக 4, பாஜ நியமன எம்எல்ஏக்கள் 3 என 14 பேர் உள்ளனர். எனவே நாராயணசாமி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரும் மனுவை எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் அதிமுக, பாஜ எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டு கவர்னர் செயலரிடம் கடந்த 16ம் தேதி வழங்கினர். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், கவர்னர் கிரண்பேடி அதிரடியாக நீக்கப்பட்டு, தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று காலை 9.07 மணிக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜனுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழில் உறுதி மொழி கூறி, முறைப்படி பதவியேற்று கொண்டார். அப்போது, புதுச்சேரி மக்கள் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் என்னை அர்ப்பணித்துக் கொள்வேன்’ என உறுதி கூறினார். பின்னர் தமிழிசைக்கு முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, திமுக, அதிமுக எம்எல்ஏக்கள், பாஜ தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, கவர்னர் தமிழிசை அளித்த பேட்டியில், ‘‘எதிர்கட்சிகள் கொடுத்துள்ள மனுவை ஆராய்ந்து சட்டவிதிகளுக்கு உட்பட்டு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். புதுச்சேரியை பொறுத்தவரையில், கவர்னர், முதல்வர் அதிகார மோதல் விவகாரத்தில், யாருடைய அதிகாரத்தையும் பறித்து கொள்ளவோ, அவர்களது அதிகாரத்தில் தலையிடவோ மாட்டேன். தேர்வு செய்யப்பட்ட அரசுடன் இணக்கமாக இருப்பேன். சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் நடந்து கொள்வேன். அரசியல் உள்நோக்கத்துடன் நான் இங்கு வரவில்லை’’ என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், நேற்று மாலை மீண்டும் ரங்கசாமி தலைமையில் அதிமுக- பாஜ எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து, ‘‘ஆளும் அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவேண்டும்’’ என்று வலியுறுத்தனர். இதனை தொடர்ந்து கவர்னர் மாளிகை அலுவலகம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய அரசியலமைப்பு பிரிவு 239 மற்றும் 1963 யூனியன் பிரதேச சட்டம் உட்பிரிவு- 6, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முதல்வர் நாராயணசாமிக்கு கீழ்க்கண்ட  உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது. புதுச்சேரி சட்டசபை வரும் 22ம் தேதி (திங்கட்கிழமை) கூட்டப்பட வேண்டும்.  ஒரே செயல் திட்டமாக முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசாங்கம் பெரும்பான்மையை பெற்று இருக்கிறதா என்பதை கையை உயர்த்தி வாக்களிப்பு செய்ய வேண்டும்.

இவை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட வேண்டும். ஒட்டுமொத்த நடவடிக்கைகள் யாவும்  22ம் தேதி மாலை 5 மணிக்குள் முடித்துவிட வேண்டும். சபையை ஒத்திவைக்கவோ, தாமதப்படுத்தவோ, இடை நிறுத்தவோ கூடாது. சட்டசபை செயலர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் சட்டம்-ஒழுங்கு சீர்குலையாமல் அமைதியான முறையில் வாக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்வார்கள். தலைமை செயலர், காவல்துறை தலைவர் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க வரும் எம்.எல்.ஏ.க்களுக்கு எவ்விதமான தடையும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். சட்டம்- ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க அனைத்து விதமான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கவர்னராக பொறுப்பேற்றதும் தமிழிசை பிறப்பித்த இந்த உத்தரவை தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமி தனது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் புதுவை அரசியலில் பரபரப்பு நிலகிறது.


* முதன்முதலாக வாக்களிக்கும் நியமன எம்எல்ஏக்கள்
கடந்த 2016ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, நியமன எம்எல்ஏக்கள் பெயரை பரிந்துரை செய்யாமல் நாராயணசாமி காலதாமதப்படுத்தினார். இதனை பயன்படுத்தி 3 நியமன எம்எல்ஏக்களாக பாஜவை சேர்ந்தவர்களை மத்திய அரசு நியமித்தது. இவர்கள், புதுச்சேரி அரசியல் வரலாற்றில் முதன்முறையாக 22ம் தேதி வாக்களிக்க உள்ளனர்.

Tags : Narayanasamy ,Congress ,government ,governor ,Tamil Nadu , Narayanasamy-led Congress government in Puduvai deadline to prove majority in 22: Tamil Nadu orders new governor-elect
× RELATED கை சின்னத்துக்கு போடும் ஓட்டு.. மோடிக்கு வைக்கும் வேட்டு..