தேவையற்ற இடத்தில் கட்டுவதற்கு எதிர்ப்பு: பாலப்பணியை நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் அருகே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, 6 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதையொட்டி மேம்பாலங்களும் கட்டப்படுகின்றன. இதில் பாலுசெட்டிச்சத்திரத்தில் பள்ளிகள், காவல் நிலையம், பஸ் நிறுத்தம், கோயில், ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் கடந்து செல்லும் பிரதான இடத்தில் பாலம் கட்டாமல் மாற்று இடத்தில் பாலம் கட்டப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில் எதிரில் உள்ள பகுதி வழியாக முசரவாக்கம், முட்டவாக்கம், திருப்புட்குழி, மேல்ஒட்டிவாக்கம் உள்பட 24 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாலுசெட்டிசத்திரம் மற்றும் காஞ்சிபுரம் செல்ல தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லவேண்டும்.

இந்த பகுதியில் கடந்த 13 ஆண்டுகளில் நடந்த விபத்துக்களில் 450க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இந்தப் பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். அதன்படி அங்கு மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதியை புறக்கணித்துவிட்டு, தேவையில்லாத இடத்தில் மேம்பாலம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், தேவையற்ற இடத்தில் நடக்கும் மேம்பால கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தி, 100க்கு மேற்பட்ட மக்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்து பாலுசெட்டிச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories:

>