×

விளையாட்டு திடல் அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் தடுத்தவருக்கு சரமாரி அடி உதை: ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே விளையாட்டு திடல் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதே பகுதியை சேர்ந்த சிலர் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கினர். ஆர்.கே.பேட்டை அருகே கோபாலபுரம் ஊராட்சியில், அக்கிராமத்தை சேர்ந்த  ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பலராமன் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். அவரை பணி செய்ய விடாமல் அதே கிராமத்தை சேர்ந்த  ஒரு தரப்பினர் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக கூறப்படுகின்றது.  இந்நிலையில்,  நேற்று அங்குள்ள புறம்போக்கு நிலத்தில்  இளைஞர்களுக்கு விளையாட்டு திடல் அமைக்கும் பணியில் ஊராட்சி மன்ற தலைவர் பலராமன் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதிமுக  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், அவரது மகன் சுனில், பார்த்திபன், தெய்வ சிகாமணி  உட்பட 5 பேர்  விளையாட்டு திடல் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி ஊராட்சி மன்ற தலைவருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர், ஊராட்சி மன்ற தலைவரை  தாக்கினர்,  தடுத்த அவரது தம்பி தனசேகரன் என்பவரை உருட்டுகட்டையால் 5 பேரும் சேர்ந்த சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக  வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் பலராமன்  ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர் சுரேந்திரகுமாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  


Tags : panchayat leader ,riot ,playground ,RKpet , Panchayat leader involved in setting up a sports ground was attacked by a barrage of bullets: a riot broke out near RKpet.
× RELATED மே தினப் பூங்கா விளையாட்டு மைதானத்தை...