×

பொதுநல வழக்கு தொடர்ந்ததால் வக்கீல் தம்பதி சரமாரி குத்திக்கொலை: பட்டப்பகலில் சுற்றி வளைத்து கொன்ற கும்பல்

திருமலை: கொலை வழக்கு ஒன்றில் பொது நல வழக்கு தொடர்ந்த வக்கீல் தம்பதி பட்டப்பகலில் சரமாரி கத்தியால் சரமாரி குத்து கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்தவர் சீலம் ரங்கய்யா. இவரை கடந்த ஆண்டு மே 26ம் தேதி ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக மந்தானி காவல் நிலைய போலீசார் அழைத்து சென்றனர். அப்ேபாது மர்மமான முறையில் சீலம் ரங்கய்யா இறந்தார். இதுதொடர்பாக நாகமணி என்ற வக்கீல் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து நாகமணிக்கும், அவரது கணவரான வக்கீல் கட்டுவாமன்ராவ் என்பவருக்கும் போலீசாரிடமிருந்து மிரட்டல்கள் வந்ததாம். மேலும் வக்கீல் தம்பதி மீது பொய்யான வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளார்களாம். ‘எங்களது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என கடந்த வாரம் வக்கீல் தம்பதி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இந்நிலையில் நாகமணி, கட்டுவாமன்ராவ் ஆகிய இருவரும் நேற்று மாலை பெடப்பள்ளி அருகே காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென இவர்களது காரை வழிமறித்துள்ளனர். தம்பதி இருவரும் காரில் இருந்தபடி அந்த நபர்களிடம் கேட்டுள்ளனர். அப்போது திடீரென அந்த கும்பல் காரை சுற்றி வளைத்து தாக்கினர். மேலும்  நாகமணி, கட்டுவாமன்ராவ் ஆகிய இருவரையும் கத்தியால் சரமாரி குத்தியுள்ளனர். இதில் நாகமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கட்டுவாமன்ராவ் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒரு நபர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அவரிடம், கட்டுவாமன்ராவ், ‘எங்களை கொலை செய்ய கொல்லகுண்டா ஸ்ரீனிவாஸ் என்பவர்தான் ஆட்களை அனுப்பியுள்ளார்’ எனகூறியபடி மயங்கி விழுந்தாராம்.

இதுகுறித்து தகவலறிந்த பெடப்பள்ளி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த கட்டுவாமன்ராவை மீட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே கட்டுவாமன்ராவ் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார், நாகமணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெடப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோவில் கட்டுவாமன்ராவ் கூறிய குண்டா ஸ்ரீனிவாஸ் என்பவர் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. பட்டப்பகலில் நடுரோட்டில் வக்கீல் தம்பதியை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Lawyer ,death , Welfare case, lawyer couple, volley, stabbing
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...