×

கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் தற்கொலை: மதுரையில் பரபரப்பு

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வண்டியூர், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்(52). மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணி செய்து வந்தார். நேற்று பகல் முழுவதும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வழக்கம்போல் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். மாலை பணி முடிந்த பின்னர் வீட்டுக்கு செல்லாமல், கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே தங்கியுள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்களுக்கும், அவர் அலுவலக வளாகத்தில் இருந்தது தெரியவில்லை.

 இந்நிலையில் வேல்முருகன், இன்று காலை கலெக்டர் அலுவலக வளாக மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். காலையில் பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசார், அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த தல்லாகுளம் போலீசார், வேல்முருகனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருடன் பணியாற்றி வரும் மற்ற தூய்மைப் பணியாளர்களை வரவழைத்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்த வேல்முருகனுக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் இதனால் அவர் விரக்தியில் இருந்தார் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தின் மாடியிலேயே பணியாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Collector ,Madurai , Collector's office, cleaner, suicide
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...