×

பணம், சொகுசு வாழ்க்கைக்காக பலரை மணந்த ‘கல்யாண ராணி’: போலீசார் தீவிர விசாரணை

வேடசந்தூர்: பணத்திற்காக ஐந்திற்கும் மேற்பட்டோரை திருமணம் செய்த கல்யாண ராணி குறித்து மயிலாடுதுறை, வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறையை சேர்ந்த பாலகுரு என்பவர் மயிலாடுதுறை எஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டம், மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்த ரஜபு நிஷா (32) கடந்த 2018 நவம்பர் மாதம் பேஸ்புக் மூலம் அறிமுகமானார். நான் திருமணம் ஆகாதவன் என்பதை அறிந்து, ஏமாற்றும் நோக்கத்தில் பொய்யாக காதலிப்பது போல் நடித்து, பல்வேறு இடங்களுக்கு ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்றார். நானும் அவர் காதலிப்பது உண்மை என்று நம்பி 2019, மே 12ல் மணக்குடி பொறையான் கோயிலில் முறைப்படி திருமணம் செய்து கொண்டேன்.

அதன்பிறகு சிவப்பிரியா நகர், வள்ளாலகரம் பகுதியில் தனிக்குடித்தனம் வைத்து குடும்பம் நடத்தினேன். நான் டிரைவராக வேலை பார்த்து வருவதால் அடிக்கடி வெளியூர் சென்று விடுவேன். நான் வீட்டில் இல்லாத நேரத்தில் ரஜபு நிஷா பேஸ்புக், டிக்டாக்கிற்காக தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி வந்தார். இதில் சந்தேகம் அடைந்து செல்போனை எடுத்து பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக பல்வேறு ஆண் நண்பர்களுடன் டிக்டாக் மூலம் தொடர்பில் இருந்தது தெரிந்தது.


குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்த பார்த்திபனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரிந்தது. மேலும் நான் வீட்டில் இல்லாத நேரத்தில் பார்த்திபனை வரவழைத்து உல்லாசமாக இருந்ததும் தெரிந்தது. இதுகுறித்து நான் கேட்டபோது, எங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.

அப்போது ரஜபு நிஷா, ‘‘நான் உன்னை மட்டும் திருமணம் செய்யவில்லை, உன்னை போல் ஐந்துக்கும் மேற்பட்டோரை பணத்திற்காக திருமணம் செய்துள்ளேன். இப்போது பார்த்திபனை திருமணம் செய்து விட்டேன். நீ மேலும் எனது வாழ்க்கைக்கு இடையூறாக இருந்தால் பார்த்திபனுடன் சேர்ந்து உன்னை கொலை செய்து விடுவேன்’’ என மிரட்டினார். என்ன செய்வது என்று தெரியாமல் வேலைக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த ரூ.70,000 பணம், ஒரு பவுன் செயினை திருடி கொண்டு சென்று விட்டார். நான் அவர் அம்மாவிற்கு போன் செய்து நடந்ததை கூறினேன். அதற்கு அவர், ‘‘என் மகள் என்னுடைய ஆலோசனைப்படிதான் இதுவரை 7 பேரை திருமணம் செய்துள்ளார்.

மேலும் பணத்திற்காக எனது மகள் பல பேரை திருமணம் செய்வாள். நீ ஒதுங்கிக் கொள். இல்லையென்றால் உன் உயிருக்கு ஆபத்து’’ என்று அவரும் கொலை மிரட்டல் விடுத்தார். என்னை திருமணம் செய்து ஏமாற்றிய ரஜபு நிஷா மீதும், எனக்கு கொலைமிரட்டல் விடுத்த அவரது தாய் மும்தாஜ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் ரஜபு நிஷாவை காதலித்து வருவதால் அவரை மீண்டும் என்னுடன் சேர்ந்து வாழ்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு குறித்த செய்தி பேஸ்புக், வாட்ஸ்அப்பில் அதிகளவில் பரவி வருகிறது. இப்புகார் குறித்து மயிலாடுதுறை, வேடசந்தூர் போலீசார் இணைந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : investigation , Money, for luxury life, many, wedding queen
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை