×

சர்ச்சை தீர்ப்பு கூறியதால் நீதிபதிக்கு ‘ஆணுறை’ பாக்கெட் அனுப்பிய பெண்: மகாராஷ்டிராவில் பரபரப்பு

அகமதாபாத்: சர்ச்சை தீர்ப்பு கூறிய பெண் நீதிபதிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அவரது முகவரிக்கு ‘ஆணுறை’ பாக்கெட்டுகளை குஜராத்தை சேர்ந்த பெண் அனுப்பிய விவகாரம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் பணியாற்றும் கூடுதல் நீதிபதி புஷ்பா கனேடிவாலா என்பவர் கடந்த ஜனவரி 19ம் தேதி அளித்த தீர்ப்பில், ‘12 வயது சிறுமியின் ஆடையோடு உடம்பைத் தொடுவது போக்சோ சட்டத்தில் பாலியல் குற்றாமாகாது. உடலோடு உடல் தொடர்பில் இல்லை’ எனத் தீர்ப்பளித்ததுடன் குற்றம்சாட்டப்பட்டவரை விடுதலை செய்தார். அதேபோல் மற்றொரு வழக்கில், ‘5 வயது சிறுமியின் கைகளைப் பற்றுவதும், பேண்ட் ஜிப்பை திறக்கச் செய்ய வைப்பதும் போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் குற்றமில்லை’ எனக் கூறி தண்டனை பெற்றவரை விடுவித்தார்.

இந்த இரு தீர்ப்புகளும் பெரும் விவாதத்தை எழுப்பின. பெண் நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையமும், குழந்தைகள் உரிமை ஆணையமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இதைத்தொடர்ந்து இந்த தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிபதி புஷ்பா கானேடிவாலாவின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த இளம்பெண் தேவஸ்ரீ திரிவேதி என்பவர், 150 ஆணுறைகளை பாக்கெட்டில் அடைத்து பார்சலாக அனுப்பியுள்ளார். இதேபோல், மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையின் 12 கீழ்நீதிமன்றங்களும் ஆணுறைகளை அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து தேவஸ்ரீ திரிவேதி கூறுகையில், ‘அநீதியை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. நீதிபதி புஷ்பா கனேடிவாலாவின் தீர்ப்பால் ஒரு அப்பாவி சிறுமிக்கு நீதி கிடைக்கவில்லை. எனவே அவரை இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். நான் அனுப்பிய ஆணுறை பாக்கெட்டுகளை நீதிமன்ற பதிவு அலுவலகம் பெற்றுக் கொண்டது. அதற்கான ஒப்புதல் சான்றும் எனக்கு வந்துள்ளது. நீதிபதியின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் ஆணுறையை அனுப்பினேன். ஒரு பெண்ணாக நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை’ என்றார். அதேநேரம், நாக்பூர் நீதிமன்ற பதிவக அலுவலகம், இதுபோன்ற பாக்கெட் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று கூறியுள்ளது.

இதுகுறித்து நாக்பூர் பார் அசோசியேஷனின் வழக்கறிஞர் ரங் பண்டர்கர் கூறுகையில், ‘ஆணுறை அனுப்பியது நீதிமன்ற அவமதிப்பாகும். அந்த பெண்ணின் செயலுக்காக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்றார். மகாராஷ்டிரா பெண் நீதிபதிக்கு, குஜராத் பெண் ஒருவர் ஆணுறை பாக்கெட்டுகள் அனுப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Maharashtra , Controversial judgment, to judge, condom, sent, woman
× RELATED மகாராஷ்டிராவில் கிராமப்புற...