×

குமரியில் கணக்கெடுப்பு தொடக்கம் வெளிநாட்டு பறவைகள் வருகை குறைந்தது: வாழ்விடங்கள் அழிப்பால் இடம் பெயர்ந்தன

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில்  வெளிநாட்டு பறவைகள் வருகை குறைந்து இருப்பது முதல் நாள் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. குமரி மாவட்டத்திற்கு பறவை இனங்கள் வருகை குறித்து ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வனத்துறை சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு நேற்று (17-ந்தேதி) தொடங்கியது. பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர், இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

7 குழுக்களாக பிரிந்து சென்று கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர். தேரூர், சுசீந்திரம், மாணிக்கப்புத்தேரி குளம், மணக்குடி காயல், தத்தையார் குளம், பால்குளம், ராஜாக்கமங்கலம் பகுதிகளிலும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. நவீன கேமராக்கள் உதவியுடன் பறவைகள் வருகை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பறவைகளின் கால் தடங்கள், எச்சம் உள்ளிட்டவை மூலமும் கணக்கெடுப்பு நடைபெற்றது.

பூ நாரை, மஞ்சள் மூக்கு வாத்து, மீன் கொத்தி, தவிட்டு கொக்கு, வெண் கொக்கு, முக்குளிப்பான், வர்ண நாரை, கூழக்கடா,  கொசு உல்லான், உள்ளிட்ட பல்வேறு வகையிலான பறவை இனங்கள் இருப்பது,  கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. பறவைகள் வருகை வழக்கத்தைவிட இந்த ஆண்டு மிக குறைவான அளவே இருந்தது. காலை 5 மணிக்கு தொடங்கிய கணக்கெடுக்கும் பணி காலை 9 மணி வரை நடந்தது. மாவட்ட வன அதிகாரி அசோக்குமார், பறவைகள் ஆராய்ச்சியாளர் ராபர்ட் கிரப், சுற்றுசூழல் ஆர்வலர் டேவிட்சன் உள்ளிட்டோரும் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றனர்.

இன்றும் (18ம் தேதி) கணக்கெடுப்பு நடக்கிறது. இது குறித்து பறவைகள் ஆர்வலர் டேவிட்சன் கூறுகையில், குமரி மாவட்டத்தில் வழக்கமாக தென்படும் பறவைகளை விட இந்த ஆண்டு மிக குறைவான அளவே பறவைகளை காணமுடிந்தது. 35 சதவீதம் பறவைகள் வரத்து இல்லை.  காலசூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றம். பறவைகள் வாழிடங்கள் அழிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால்  பறவைகள் வருகை குறைந்துள்ளது என்றார்.

Tags : bird arrivals , Kumari, Survey, Exotic Birds, Visit
× RELATED யானை தாக்கி விவசாயி பலி