நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் :நடுவழியில் தவிக்கும் பயணிகளுக்குத் தண்ணீர், பால், பழங்கள் வழங்க விவசாய சங்கத் தலைவர் முடிவு!!

புதுடெல்லி: மத்திய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் சுமார் 3 மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் 11 கட்டமாக மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை தொடர்கின்றனர். கடந்த 6ம் தேதி விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதை ஏற்று 3 மணி நேரம் நாடு முழுவதும் உள்ளூர் விவசாயிகள் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பஞ்சாப், அரியானா, உபியில் மறியல் போராட்டம் தீவிரமாக நடந்தது.

இதைத் தொடர்ந்து, அடுத்ததாக ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக சம்யுக்தா கிசான் மோர்சா விவசாய அமைப்பு கடந்த வாரம் அழைப்பு விடுத்தது. இதன்படி, இன்று பகல் 12 மணி முதல்  நாடு தழுவிய 4 மணி நேர ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது. இதனால் பஞ்சாப், ஹரியானா, உ.பி.யில் ரயில் சேவை முடங்கியது. விவசாயிகள் ரயில் தண்டவாளங்களில் மறியல் செய்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். மேலும் அமைதியாக நடைபெறும் இந்த மறியலின்போது நடுவழியில் தவிக்கும் பயணிகளுக்குத் தண்ணீர், பால், லசி, பழங்கள் வழங்கித் தங்கள் கோரிக்கைகளின் நியாயங்களை எடுத்துரைக்கப் போவதாக விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.இதனிடையே மறியல் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். அதே சமயம் பீகாரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>