×

வரைபடம் தயாரிப்பதற்காக ட்ரோன் கேமராவில் நிலப்பரப்பை படம் எடுக்கும் பணி தொடக்கம்: நிலத்தடி நீர்மட்டமும் கண்டறியப்படும்

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் டவுன் பிளானிங் துறை சார்பில் உள்ளூர் திட்டக்குழும திட்டத்தின் கீழ் ட்ரோன் கேமரா மூலம் மாவட்டத்தின் நிலப்பரப்பை துல்லியமாக படம் எடுத்து வரைபடம் தயாரிப்பதற்கான துவக்க விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி பணியை துவக்கி வைத்து பேசுகையில், ‘‘சிவகங்கை நகர்ப்பகுதியில் ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பும் பணி துவக்கப்பட்டுள்ளது.

தரைப்பகுதியிலிருந்து 120 மீ ஆகாயத்தில் பறந்து படம் எடுக்கும் பணியை விமானம் மேற்கொள்ளும். அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிகள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், நீர்நிலைப்பகுதிகள், பொதுமக்கள் குடியிருப்புப்பகுதிகள் மற்றும் குடியிருப்புக்களுக்கு ஏற்ற பகுதிகள் என துல்லியமாக கண்டறிந்து கணினி வாயிலாக வரைபடம் தயாரிக்கும் பணி நடைபெறும். நிலத்தடியில் எங்கெங்கு நீர் மட்டம் எவ்வளவு என்பது கண்டறியப்படும். குடியிருப்புப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம், குடிநீர் தேவையை கண்டறிவதற்கும் பயன்படுத்தப்பட உள்ளது.

2 மாத காலத்திற்குள் மாவட்டத்தில் இப்பணி முடிக்கும் வகையில் துவக்கப்பட்டுள்ளது.  சிவகங்கை நகர் மற்றும் திருப்புவனம் பகுதிகளில் பணிகள் முடிக்கப்பட்டு பின்னர் காரைக்குடி பகுதியில் மேற்கொள்ளப்படும்’’ என்றார். இந்நிகழ்ச்சியில் டவுன் பிளானிங் துணை இயக்குநர் நாகராஜன், திட்ட இயக்குநர்(உள்ளூர் திட்டக்குழுமம்) மணிகண்டன், மேற்பார்வை கண்காணிப்பு அலுவலர் அண்ணாமலை, வரைபட உதவி மேலாளர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Landscaping with a drone camera for mapping: Groundwater level detected
× RELATED மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக...