×

கொரோனா வழிகாட்டல் காரணங்களை பயன்படுத்தி பீகார் பேரவை தேர்தலில் பல கோடி ரூபாய் சுருட்டல் : அதிகாரிகளின் மோசடிகள் அம்பலம்

பாட்னா:கொரோனா வழிகாட்டல் நெறிமுறை காரணங்களை பயன்படுத்தி பீகார் பேரவை தேர்தலில் பல கோடி ரூபாயை அதிகாரிகள் சுருட்டியுள்ளனர். இவர்கள் செய்த மோசடிகள் தேர்தல் ஆணைய  தணிக்கையில் அம்பலமாகி உள்ளது. கொரோனா வழிகாட்டல் நெறிமுறைகளின்படி மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு கடந்தாண்டு அக். 28ம் தேதி தொடங்கி, நவ. 7ம் தேதியுடன்  3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான அனைத்து வாக்குகளும் நவ. 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஏற்கனவே ஆட்சியில் இருந்த முதல்வர் நிதிஷ்குமார்  தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. கொரோனா வழிகாட்டல்படி தேர்தல் நடந்ததால், வாக்கு எண்ணிக்கை மையங்கள் அதிகரிக்கப்பட்டன.  அதனால் கூடுதல் செலவினங்கள் ஆகின.

மேற்கண்ட செலவினங்கள் குறித்து தற்போது தணிக்கை நடைபெற்று வருவதால், அதில் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளது அம்பலமாகி உள்ளது. குறிப்பாக தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட  பாதுகாப்புப் படையினரின் பராமரிப்பு செலவினங்கள் மிக அதிகளவில் அதிகரித்து கணக்கு காட்டப்பட்டுள்ளது. தேர்தல்கள் தொடர்பான நிர்வாகச் செலவுகள் பெருமளவில் அதிகரித்து கணக்கு  காட்டியுள்ளதால், இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பீகார் கிழக்கு மாவட்ட கலெக்டர் அபெக்ஸ் கபில் கூறுகையில், ‘சட்டப்  பேரவை தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களுக்கான செலவினங்களை மேற்கொள்ள தனியாருடன் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. தற்போது தேர்தல்  முடிவுற்றதால் அவர்கள் தாங்கள் செய்த செலவின விபரங்களை சமர்பித்துள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது நடந்து முடிந்த பேரவை  தேர்தல் செலவு 10 முதல் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு சட்டசபை ெதாகுதிக்கும் ரூ.21 கோடி வரை செலவு செய்துள்ளதாக ஒப்பந்தக்காரர்கள் கணக்கு காட்டி உள்ளனர்

வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதல் துணை ராணுவத்தினர் அழைக்கப்பட்டனர். கடந்த மக்களவைத் தேர்தல் செலவினங்களுடன் ஒப்பிடும்போது ஒரு  தொகுதிக்கு ரூ.3 கோடி செலவாகும் என்று மதிப்பிட்டோம். ஆனால் இங்கே ஒரு சட்டசபை தொகுதிக்கு ரூ.21 கோடி வரை செலவு செய்துள்ளனர். பாட்னா மாவட்டத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் 60  துணை ராணுவப் படைகள் வரவழைக்கப்பட்டன. அவர்களுக்கு ரூ.2.30 கோடி செலவு செய்யப்பட்டது. ஆனால் ஒன்றரை வருடம் கழித்து தற்போது நடத்தப்பட்ட தேர்தலில் அதே மாவட்டத்தில் 215 துணை  ராணுவப் படைகள் வரவழைக்கப்பட்டதால் ரூ.42 கோடி செலவாகி உள்ளது. 60 துணை ராணுவ படைக்கு ரூ.2.30 கோடி என்றால் 215 துணை ராணுவ படைக்கு ரூ.42 கோடி எப்படி செலவானது என்பது  பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. செலவினங்கள் எவ்வாறு அதிகரித்தது? என்ன நடந்தது? போன்றவை குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ேமலும், தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட  வாகனங்களின் எரிபொருள் செலவைப் பார்த்தால், நான்கு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டிய அதிகாரி, தான் பைக்கில் சென்றதாக கணக்கு காட்டி உள்ளார். ஒரு பைக்குக்கு நூற்றுக்கணக்கான லிட்டர்  பெட்ேரால் போட்டதாக தெரிவித்துள்ளார். இதுதவிர, பாதுகாப்பு படையினர் தங்காத இடத்தில் கூடார பந்தல் போட்டதாக கணக்கு காட்டி உள்ளனர். இத்தகைய தேர்தல் செலவின முறைகேடுகள் குறித்து  பல மாவட்டங்களில் புகார்கள் எழுந்துள்ளன. இந்த முறைகேடுகள் அனைத்தையும் விசாரிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி எச்.ஆர்.சீனிவாஸ்  உத்தரவிட்டுள்ளார்’ என்று தெரிவித்தார்.

5 மாநிலத்தில் என்ன நடக்கும்?

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநிலங்களில் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களிலும் கொரோனா வழிகாட்டல்  நெறிமுறைகளின் தேர்தல் நடத்தப்பட உள்ளதால், இங்கும் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனால், தேர்தல் செலவினங்கள் பல கோடி ரூபாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  மேற்குவங்கம், அசாம், கேரளா ஆகிய மாநிலங்களில் பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால், கூடுதல் பாதுகாப்பு படைகள் வரவழைக்கப்பட வாய்ப்புள்ளது. அதேேபால் தமிழகம், புதுச்சேரியிலும் குறிப்பிட்ட பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு படை வரவழைக்கப்படலாம். எனவே, பாதுகாப்பு படையினருக்கு செலவு செய்த வகையில் பீகாரில் பல மோசடிகள்  நடந்துள்ளது அம்பலமானது போல் மேற்கண்ட மாநிலங்களிலும் நடக்க வாய்ப்புள்ளது. அதனால், தேர்தல் அதிகாரிகளின் செலவின விவகாரத்தை கண்காணிக்க சிறப்பு கவனத்துடன் செயல்பட வேண்டும்  என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Billions ,Bihar , மோசடி
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!