×

திமுக நிறைவேற்றிவிடும் என்பதாலேயே தேவேந்திரகுல வேளாளர் பொதுப்பெயர் மசோதா அவசர அவசரமாக தாக்கல் : மக்கள் விடுதலை கட்சி

சென்னை:திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் நிறைவேற்றிவிடும் என்பதாலேயே அவசர அவசரமாக தேவேந்திரகுல வேளாளர் பொதுப்பெயர் அரசாணை சட்ட முன்வடிவை பாஜ அரசு  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததாக மக்கள் விடுதலை கட்சி தலைவர் முருகவேல் ராஜன் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தேவேந்திரகுல வேளாளர் எனும்  பொதுப்பெயரில் தாங்கள் அழைக்கப்பட வேண்டும் என்று 7 உட்பிரிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்த எம்மக்களின் நீண்ட போராட்டக்கங்களின் விளைவாக தற்போது மோடி அரசு அதற்கான சட்ட  நடைமுறையை துவக்கியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக, காங்கிரஸ், மக்கள் விடுதலை கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே இந்த கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து ஆதரித்தன. திமுக ஒருபடி மேலே போய் தனது  தேர்தல் அறிக்கையிலும் இக்கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றப்படும் என தெரிவித்து இருந்தது. தமிழகத்தில் இக்கோரிக்கையை சட்டமாக்குவதற்கு 27.1.2011ல் தமிழக முதல்வராக இருந்த கலைஞர்  ஓய்வுபெற்ற நீதிபதி ஜனார்த்தனன் தலைமையில் ஒரு நபர் கமிஷனை அமைத்து உத்தரவிட்டு இதற்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தார். நான் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய 2001-2006ல்  தேவேந்திரகுல வேளாளர் பொதுப்பெயர் அரசாணை கோரிக்கையை வலியுறுத்தி சட்டப்பேரவையில் பேசினேன். ஆனால், அன்றைய முதல்வர் ஜெயலலிதா இந்த அரசாணைக்கு செவிசாய்க்கவே இல்லை.

 இக்கோரிக்கைக்காக மதுரையில் 2005ம் ஆண்டு மாநாடு நடத்தினேன். ஆனால், மாநாடு முடிந்த கையோடு அதிமுக அரசு ஒரு பொய் வழக்கில் என்னை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். கடந்த  25 ஆண்டுகளாக நாங்களும், எங்களைப்போன்றே பல தேவேந்திரகுல வேளாளர் சமுதாய அமைப்புகளும் போராடியுள்ளார்கள். ஆனால், இதுவரை அதிமுக, பாஜக அரசு இக்கோரிக்கையை ஏற்கவில்லை. ஆனால், 2019ல் திமுகவின் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் இக்கோரிக்கை திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.  இதேபோல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் தொடர்ந்து இக்கோரிக்கையை திமுக நிறைவேற்றும் என முழங்கி வருகிறார். இதன் காரணமாக தான் பாஜ அரசு அவசர  அவசரமாக தேர்தல் நெருங்கும் நேரத்தில் இக்கோரிக்கைக்கு ஆதரவாக சட்ட முன்வடிவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Devendrakula Vellalar Common Name ,DMK ,People's Liberation Party , மக்கள் விடுதலை கட்சி
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி