×

ராணிப்பேட்டையில் ரூ.10 கோடியில் நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் மந்தம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் ரூ.10 கோடி மதிப்பில் அமையவுள்ள நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்படாமல் மந்தகதியில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ராணிப்பேட்டை நகராட்சி சார்பில் பழைய சந்தைமேடு பகுதியில் பஸ் நிலையம் இயங்கி வந்தது. வாலாஜா, சோளிங்கர், ஆற்காடு உட்பட பல்வேறு நகரங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கி வந்தன. இதன்மூலமாக கிராமப்புறத்தில் உள்ள பொதுமக்கள் நகர்புறத்திற்கு எளிதாக சென்று வந்தனர். இந்நிலையில், பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப அதிக இடவசதியுடன் பஸ் நிலையம் அமைக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராணிப்பேட்டை நகரில் புதிதாக பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கென ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ராணிப்பேட்டை டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் அதிநவீன தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளுடன் பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், இடம் தேர்வு செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலான நிலையில், பஸ் நிலையம் அமைப்பதற்கான பணிகள் மந்தகதியில் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மாவட்டத்தின் தலைமையிடமாக விளங்கும் ராணிப்பேட்டை டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் அதிநவீன வசதிகளுடன் ரூ.10 கோடி மதிப்பில் பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
டிஎன்ஐடிபிஐ(தமிழிநாடு இன்டஸ்ட்ரியல் டெவல்ப்மெண்ட் போர்ட்) மேற்பார்வையில் டிபிஎப்ஓடி(டிசைன் பில்ட் பார் ஆப்ரேட் அண்டு டிரான்ஸ்பர்) என்கிற திட்டத்தின் அடிப்படையில் அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும், என்றும் வைபை வசதி, நவீன இருக்கை வசதிகள், குழந்தைகள் விளையாட்டு பூங்கா, பஸ் வருகை மற்றும் புறப்படும் நேரம், பஸ் செல்லும் ஊர் விவரங்கள் ஆகியவை தெரிவிக்கும் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள், சோலார் மின் தகடுகள் ஆகியவை அமைக்கப்படும், என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இடம் தேர்வு செய்யப்பட்டு 6 மாதங்கள் முடிந்த நிலையில், பஸ் நிலையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படாமல் மந்த நிலையில் உள்ளது.இதனால் பஸ் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ராணிப்பேட்டை நகரில் புதிய பஸ் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Tags : bus stand ,Ranipettai , Bus station
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை