×

ஆத்தூர் பகுதியில் பச்சை நிற குடிநீரால் பரபரப்பு: சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு

சின்னாளபட்டி: ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் இருந்து ஆத்தூர், பித்தளைபட்டி, வக்கம்பட்டி, பிள்ளையார்நத்தம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக விநியோகிக்கப்படும் குடிநீர் பச்சை நிறமாக வந்ததால், பொதுமக்கள் பயன்படுத்தாமல் வந்தனர். மேலும் இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நேற்று சுகாதார பணிகள் நல இயக்குனரின் நேர்முக உதவியாளர் வல்லவன் தலைமையில் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று ஆய்வு சென்றனர். அப்போது வீடுகளில் பிடித்து வைத்திருந்த பச்சை நிற தண்ணீரை உடனே அப்புறப்படுத்துமாறு வேண்கோள் விடுத்தனர்.

மேலும் ஊராட்சி செயலர் கண்ணையாவை சம்பந்தப்பட்ட இடத்திற்கு வரவழைத்து, மேல்நிலை தொட்டியில் ஏறிய தண்ணீரை முறையாக அப்புறப்படுத்தி பிளிச்சிங், குளோரின் கொண்டு சுத்தம் செய்து, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். இதுகுறித்து திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணி கூறுகையில், ‘ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் புதிதாக வந்த மழைநீர், மீன் வளர்ப்பு இல்லாததால் தண்ணீர் பச்சை நிறத்தில் பாசி படர்ந்து வந்தது. தண்ணீரை சுத்தப்படுத்த பயன்படுத்தும் ஆலம் மருந்தை அதிகளவில் சேர்க்க சொல்லி உத்தரவிட்டுள்ளேன். மீன் வளர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

Tags : area ,Attur , Drinking water
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு