×

காவல் நிலைய மரணத்திற்கு எதிராக வழக்கு தொடுத்த வழக்கறிஞர் தம்பதி பட்டப்பகலில் வெட்டிக்கொலை!: தெலுங்கானாவில் பரபரப்பு..!!

தெலுங்கானா: தெலுங்கானாவில் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபர் மரணமடைந்த விவகாரத்தில் பொதுநல வழக்கு தொடுத்த வழக்கறிஞர் தம்பதி பரபரப்பான சாலையில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரீம் நகரை சேர்ந்த ஜீலம் ரங்கையா என்பவர் கடந்த ஆண்டு மந்தாணி காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றிற்காக விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கிடமாக மரணம் அடைந்தார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து நீதி உத்தரவு நடத்த உத்தரவிடுமாறு தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் நாகமணி என்ற பெண் வழக்கறிஞர் முறையிட்டார்.

இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து போலீசாரிடம் இருந்து மிரட்டல்கள் வருவதாகவும் பொய்யான வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்திருப்பதாகவும் நாகமணி குற்றம்சாட்டியிருந்தார். தனக்கும் தனது வழக்கறிஞர் கணவர் கட்டுவாமான் ராவின் உயிருக்கும் ஆபத்து உள்ளதால் பாதுகாப்பு வழங்ககோரியும் கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் அவர் முறையிட்டார். இந்நிலையில் வழக்கறிஞர் தம்பதியர் நேற்று மாலை 3 மணியளவில் பெடப்பள்ளி அருகே காரில் பயணம் செய்துகொண்டிருந்த போது மர்மநபர்கள் சிலர் அவர்களை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தியும், வெட்டிவிட்டும் தப்பினர். இதில் நாகமணி காரின் இருக்கையில் அமர்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிருக்கு போராடிய நிலையில் கட்டுவாமான் சாலையில் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. உயிருக்கு போராடிய நிலையிலும் தன்னையும் மனைவியும் கொலை செய்ய ஆட்கள் அனுப்பியது குண்டா சீனிவாசன் என்பவர் தான் என்று கட்டுவாமான் வாக்குமூலம் அளித்தார். இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் வழக்கறிஞர் தம்பதி சாலையில் வெட்டிகொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் கொலையாளியையும், தப்பியோடிய வழக்கறிஞர் தம்பதியின் கார் ஓட்டுனரையும் தேடி வருகின்றனர். உயிரிழந்த வழக்கறிஞர் கட்டுவாமான் குறிப்பிட்ட குண்டா சீனிவாசன், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர கமிட்டி கட்சியை சேர்ந்தவர். இவருக்கு இரட்டைக்கொலையில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Lawyer ,Telangana , Police station death, lawyer couple, murder, Telangana
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து