×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ஊட்டி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துைற ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கி உள்ளனர். அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை அனைத்து வருவாய்த்துறையினருக்கும் மேம்படுத்தப்பட்ட தர ஊதியம் வழங்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி, நில அளவை பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

பதவி உயர்விற்கு இப்பயிற்சிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கருணை அடிப்படையில் நியமனதாரர்களின் பணியினை ஒரே அரசாணையில் வரன்முறை செய்து ஆணையிட கலெக்டருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.
மாவட்டங்களில் அதிகளவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், பதிவுரு எழுத்தர் மற்றும் ஜீப் ஒட்டுநர் பணியிடங்களை உடனடியாக நிரந்தர அடிப்படையில் நிரப்பிட வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்தரவாதம் செய்து, உடன் தீர்வு காண வேண்டும்.

ஒருங்கிணைந்த பணி முதுநிலை குறித்து நீதிமன்ற தீர்ப்பினை அரசு மட்டத்தில் முழுமையாக அமுல்படுத்த வேண்டும். மேலும், புதிய உள் வட்டங்களை ஏற்படுத்தி அனைத்து உள் வட்டங்களையும் துணை வட்டாட்சியர் நிலைக்கு தரம் உயர்த்த வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்ட பாதிப்புகளை உடனே சரி செய்ய வேண்டும்.

குடும்ப பாதுகாப்பு நிதியினை ரூ.10 லட்சமாக உயர்த்திட வேண்டும். நிறுத்தம் செய்யப்பட்டுள்ள அகவிலைப்படி மற்றும் சரண்டர் விடுப்புகளை உடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு, தற்செயல் விடுப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கி உள்ளனர். இதனால், ஊட்டி கலெக்டர் அலுவலகம், 6 தாலுகா அலுவலகங்களும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். வருவாய்த்துறையினர் போராட்டத்தால் பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்குதல், தேர்தல் பணி, அலுவலக பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Tags : strike ,revenue employees , strike
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து