×

எல்லையில் திரும்பியது அமைதி!: ஐ.பி.எல். ஸ்பான்சராக மீண்டும் இணைந்தது 'விவோ'..அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

பெய்கிங்: சீனா உடனான எல்லை பிரச்சனை தொடர்பாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரின் போது அந்நாட்டின் விவோ நிறுவனத்தின் ஸ்பான்சர் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு விவோ மீண்டும் ஐ.பி.எல். போட்டியில் இணைந்திருக்கிறது. சீனாவின் டாங்குவா நகரத்தை தலைமையிடமாக கொண்டது தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விவோ. இந்த நிறுவனம் தான் கடந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை ஸ்பான்சர் செய்திருந்தது. ஆனால் சீனா உடனான எல்லை பிரச்னை தீவிரமடைந்ததை அடுத்து விவோ நிறுவனத்தின் ஸ்பான்சர் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து விவோவுக்கு பதிலாக 2020 ஐ.பி.எல். போட்டிகளுக்கு ட்ரீம் - 11 நிறுவனம் முக்கிய விளம்பரதாரராக நியமிக்கப்பட்டது. இந்திய - சீன ராணுவ மட்ட பேச்சுவார்த்தைகளின் பலனாக லடாக் எல்லையில் தற்போது அமைதி திரும்ப தொடங்கியிருப்பதை அடுத்து இந்த ஆண்டின் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான ஸ்பான்சராக விவோ நிறுவனம் மீண்டும் இணைந்துள்ளது. இந்த தகவலை போட்டிகளை நடத்தும் ஐ.பி.எல். அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடைபெறவுள்ள நிலையில் மீண்டும் விவோ ஸ்பான்சரானது குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டு முதல் விவோ ஐ.பி.எல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக செயல்பட ரூ.2199 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒவ்வொரு சீசனுக்கும் டைட்டில் ஸ்பான்சராக விவோ ரூ.440 கோடி பிசிசிஐ-க்கும் வழங்கும் என்பது குறிப்பிடதக்கது.

Tags : border ,IPL ,announcement ,Vivo ,sponsor , IPL Sponsor, 'Vivo'
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது