×

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணி விறுவிறுப்பு!: 2 இணை தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு..!!

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளை மேற்கொள்ள இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கூடுதலாக இரண்டு இணை தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உதவும்படி 2 தேர்தல் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்து தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கும். அவர்கள் இணை தலைமை தேர்தல் அதிகாரிகளாக செயல்படுவார்கள். அந்த அடிப்படையில் வேளாண் இணை செயலராக இருந்த ஆனந்த் ஐ.ஏ.எஸ். இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் சுகாதாரத்துறை இணை செயலராக இருந்த அஜய் யாதவ் ஐ.ஏ.எஸ்., பொதுப்பணித்துறையின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். வரக்கூடிய சட்டப்பேரவை பொதுத்தேர்தலானது எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படக்கூடிய நிலையில் தேர்தல் ஆணையமானது அதற்கான ஆயுத்த பணிகளை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது. முன்னதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு தமிழகம் வந்து இங்குள்ள அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

மேலும் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், டி.ஜி.பி., தலைமை செயலாளர் உள்ளிட்ட அனைவரிடமும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அடுத்தகட்டமாக தேர்தல் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருக்கிறது. இன்று மாலை தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களுடன் சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவிருக்கிறார். இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.


Tags : Tamil Nadu Legislative Assembly , Tamil Nadu Legislative Assembly Election, 2 Co-Chief Electoral Officer, Government of Tamil Nadu
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...