20 பேரின் உயிரை பறித்த சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் கைது..!!

விருதுநகர்: 20 பேரின் உயிரை பறித்த சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் குத்தகைதாரர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆலை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 12ம் தேதி சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் இருக்கக்கூடிய சந்தனமாரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 20 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர், வேலூர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 3 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர்கள் சக்திவேல், சிவகுமார், கொள்ளுப்பாண்டி உள்ளிட்ட 7 பேர் மீது 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 5 தனிப்படையானது அமைக்கப்பட்டிருந்தது. கடந்த 13ம் தேதி குத்தகைதாரர்கள் கொள்ளுப்பாண்டி கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து 15ம் தேதி குத்தகைதாரரான சக்திவேல் அவரது மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆலை உரிமையாளர் சந்தனமாரி, இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 4 பேரை கைது செய்வதற்கான தனிப்படையானது பல்வேறு பகுதிகளில் விரைந்திருக்கிறது. அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories:

>