×

காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது

காஞ்சிபுரம்: காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இந்தாண்டு பிரம்மோற்சவ விழா நேற்று அதிகாலை 4 மணிக்குமேல் 5.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தங்க மான், சந்திரப்பிரபை, யானை, ஹம்ஸ வாகனம், நாகம், தங்கக் கிளி, குதிரை, வெள்ளிரதம், தங்க சிம்மம், சூரிய பிரபை, தங்க பல்லக்கு, முத்து சப்பரம், சரபம் உள்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காமாட்சி அம்மன் வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் வரும் 23ம் தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) தியாகராஜன், கோயில் நிர்வாக அலுவலர் நாராயணன், பரம்பரை தர்மகர்த்தாவின் ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்கின்றனர்.

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் இந்தாண்டு பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோயில் முன்பு இருந்த 32 அடி உயர கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு, அதிகாலை 5.30 மணிக்கு கோயில் சிவாச்சாரியார் கள் வேத மந்திரம் முழங்க கொடியேற்றம் நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் கொடி மரத்தை சுற்றி நின்று அரோகரா கோஷம் எழுப்பினர். இதில் திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து, இரவு 8 மணிக்கு கிளி வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 23ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இதில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் நான்கு மாடவீதி களில் உலா வரும் உற்சவம் நடக்கிறது.

26ம் தேதி காலை வெள்ளித் தொட்டி உற்சவம், மதியம் 12 மணிக்கு சரவணப் பொய்கையில் தீர்த்தவாரி, மாலை 7 மணிக்கு தெப்ப உற்சவமும், இரவு குதிரை வாகன வீதி உலா நடக்கிறது. தொடர்ந்து 28ம் தேதி மாலை வேடர்பரி, இரவு திருக்கல்யாணம், மார்ச் 1ம் தேதி காலை 6 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் மணக்கோலத்தில் முருகப்பெருமான் வீதி உலா நடைபெற்று பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் கவெனிதா, திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் சக்திவேல் மற்றும் உபயதாரர்கள் செய்கின்றனர்.

Tags : Kanchi Kamatchi Amman Temple Prom , Kanchi Kamatchi Amman Temple Prom: Started with flag hoisting
× RELATED காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்...