6 ஆண்டுகளாக செம்மரங்கள் வெட்டி கடத்தல் ஆந்திராவில் இளவரசியின் சம்பந்தி குண்டர் சட்டத்தில் அதிரடி கைது: சர்வதேச தொடர்பு ஆவணங்கள் சிக்கியது

திருமலை: ஆந்திராவில் செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்திய வழக்கில் இளவரசியின் சம்பந்தி, குண்டர் சட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர் இளவரசி. இவரது சம்பந்தி பாஸ்கரன். இவர் மீது ஆந்திராவில் செம்மரக்கடத்தல் தொடர்பாக ஏராளமான வழக்குகள் உள்ளன. சில வாரங்களுக்கு முன்பு அவரை ஆந்திர போலீசார் சென்னையில் கைது செய்தனர். தற்போது, அவரை கடப்பாவில் உள்ள மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடப்பா கலெக்டர் அரிகிரணுக்கு, எஸ்பி அன்புராஜன் பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை கலெக்டர் ஏற்றதையடுத்து நேற்று முன்தினம் சிறைக்கு சென்று பாஸ்கரனிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆவண நகலை எஸ்பி அன்புராஜன் வழங்கினார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தற்போது கைதாகியுள்ள பாஸ்கரன், கடந்த 6 ஆண்டுகளாக செம்மரங்களை வெட்டி கடத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக கடப்பா மாவட்டத்தில் 29 வழக்குகள் உள்ளன. தமிழகத்தில் இருந்து கூலித்தொழிலாளர்களை அழைத்து வந்து ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், அட்லூரு, கூகலசெருவு, வீரபளி, சுண்டுப்பள்ளி ஆகிய  பகுதிகளில் செம்மரங்களை வெட்டி கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக கப்பல்கள் மூலம் சர்வதேச கும்பலுக்கு விற்று வந்துள்ளார். இதற்காக பிரத்யேக கன்டெய்னர்களை பயன்படுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாகவும் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். சர்வதேச செம்மரக் கடத்தல் கும்பலுடன் பாஸ்கரனுக்கு தொடர்பு உள்ளது. இதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>