×

‘இனிப்பான’ தொகுதிக்கு கசப்பு மருந்து தந்த எம்எல்ஏ: திருவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ சந்திரபிரபா முத்தையா

விருதுநகர் மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளில் திருவில்லிபுத்தூர் (தனி) முக்கிய தொகுதிக்கான பெருமை கொண்டது. தொகுதியில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. இந்த கோயிலின் கோபுரம் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்குகிறது. இங்கு தயாராகும் பால்கோவா சிறப்புடையது.இத்தொகுதியின் அதிமுக எம்எல்ஏ சந்திரபிரபா முத்தையா. தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் அழகர் அணை திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். இத்திட்டம் நீர்த்துப் போய் விட்டது. பல ஆண்டுகளாக செயல்பட்டு, பல நூறு குடும்பங்களை வாழ வைத்த கூட்டுறவு மில்லை திறக்கவும், தேனி வருசநாடு சாலை அமைக்கவும் எம்எல்ஏ தந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் அறிவிப்பும் காற்றில் கரைந்து விட்டது. தொகுதிக்குள் குடிநீர் பிரச்னை தீராத அவலமாக தொடர்கிறது.

பிரதான தண்ணீர் பிரச்னையை தீர்க்க எந்த நடவடிக்கையும் இல்லை. நகர்ப்புறத்தில் தாமிரபரணி திட்டம் மூலம் தண்ணீர் வந்தாலும், விநியோகத்தை முறைப்படுத்தாதது, கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத கதையாகவே இருக்கிறது.
தொகுதியில் ஆண்டாள் கோயில் பகுதி, செண்பகத்தோப்பு, பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகள் மற்றும் தாணிப்பாறை ஆகிய இடங்களை சுற்றுலாத்தலமாக்கும் வாக்குறுதிகளை எம்எல்ஏ நிறைவேற்றவில்லை. தேர்தல் காலத்தில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், மக்கள் இம்முறை அதிமுகவுக்கு தேர்தலில் செக் வைக்க தயாராகி விட்டனர். ‘‘இனிப்பு சுவையுடைய பால்கோவாவுக்கு பிரபலமான தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு, கசப்பு மருந்து தந்து விட்டார் எம்எல்ஏ சந்திரபிரபா. பதிலுக்கு நாங்களும் தரத் தயாராகி விட்டோம்’’ என்கின்றனர் மக்கள்.

‘₹1 கோடிக்கு போலீஸ் கட்டிடம்’
அதிமுக எம்எல்ஏ சந்திரபிரபா கூறும்போது, ‘‘எனது தொகுதிக்கு அரசு கலைக்கல்லூரி கொண்டு வந்துள்ளேன். வத்திராயிருப்பு பகுதியை தனி தாலுகாவாக மாற்றி, ரூ.2 கோடியில் புதிய தாலுகா அலுவலகம், புதிய பணிமனை கட்டப்பட்டு வருகிறது. ரூ.1 கோடியில் திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடப்பணி நிறைவடைய இருக்கிறது. வத்திராயிருப்பில் போலீஸ் குடியிருப்பு, திருவில்லிபுத்தூரில் ஆர்டிஓ அலுவலகம், தீயணைப்பு வீரர்களுக்கு ஒரு ஏக்கரில் குடியிருப்புக்கு இடம் என பல பணிகள் செய்துள்ளேன். கிராமப்புற சாலைகள், புதிய கால்நடை மருத்துவமனை அமைத்துள்ளேன். 10க்கும் அதிக பள்ளிகளை தரம் உயர்த்தியது, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சொந்த கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிமராமத்து, வன்னியம்பட்டி விலக்கு பகுதியில் புதிய பாலம் என பல பணிகள் செய்துள்ளேன்’’ என்றார்.

‘வேலைவாய்ப்புக்கான திட்டம் எதுவுமில்லை’
விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஆர்.வி.கே.துரை கூறும்போது, ‘‘திருவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படாததால், தேவையான மருத்துவ வசதிகள், உபகரணங்கள், தேவைக்கான டாக்டர்கள், படுக்கை வசதிகள் இல்லை. மேல்சிகிச்சைக்கு மதுரை செல்லும் நிலை இருக்கிறது. தொகுதிக்குள் பல ஊர்களின் கண்மாய்களில் மணல் கொள்ளை தடுக்கப்படவில்லை. நிலத்தடி நீர் பாதிக்கிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டமில்லை. திருவில்லிபுத்தூர் தொகுதியில் போக்குவரத்து நெருக்கடி உள்ளது. வத்திராயிருப்பு புறவழிச்சாலை வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை’’ என்றார்.

Tags : Srivilliputhur AIADMK ,constituency ,Chandraprabha Muthiah , MLA gives bitter medicine to 'sweet' constituency: Srivilliputhur AIADMK MLA Chandraprabha Muthiah
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...