சேலத்தில் ரெண்டு குறி வைக்குது பாமக

தமிழகத்தில் தேர்தல் நெருங்குவதால் அதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி வருகிறது. அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணியை உறுதி செய்ய தீவிரம் காட்டி வருகின்றன. இதில் அதிமுக கூட்டணியை பொறுத்தவரை, அதிக சீட் கேட்டு பாஜவும், வன்னியருக்கான உள்ஒதுக்கீடு கேட்டு பாமகவும், இரட்டை இலக்கத்தில் தொகுதி கேட்டு தேமுதிகவும் நெருக்கடி கொடுத்து வருவதால், சிக்கல் எழுந்துள்ளது. அதிமுக தரப்பில் சமாதான பேச்சுவார்த்தை தொடர்ந்து வந்தாலும், அக்கட்சிகள் தங்களது கோரிக்கைகளில் உறுதியாக உள்ளன. பாமக நிர்வாகிகள்  அதிமுகவினரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அமைச்சர்கள் பாமக நிறுவனர் ராமதாஸிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.  பிரதமர் சென்னைக்கு வந்த போது கூட கூட்டணி கட்சியை சேர்ந்த பாமக, தேமுதிகவை சேர்ந்த தலைவர்கள் செல்லவில்லை. தொடர்ந்து சீட் பங்கீடு செய்வதில் இழுபறியாக உள்ளது. இது அதிமுகவிற்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

 இதனிடையே, முதல்வர் மாவட்டத்தில்  சேலம் மேற்கு, மேட்டூர் தொகுதியை குறி வைத்து  பாமகவினர் பணிகளை தொடங்கியுள்ளனர்.  குறிப்பாக,  சேலம் மேற்கு  தொகுதி சிட்டிங் எம்எல்ஏவாக அதிமுக மாநகர செயலாளர் வெங்கடாஜலம் உள்ளார். இந்த தொகுதியை அதிமுகவிடம் இருந்து பெற  பாமக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதேபோல், கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செம்மலை எம்எல்ஏவாக இருக்கும் மேட்டூர் தொகுதியையும்  பாமக கேட்டு வருகிறது. இந்த 2 தொகுதிகளும் கண்டிப்பாக பாமகவிற்கு கிடைத்துவிடும். மேட்டூரில் மாநில தலைவர் மணியும், மேற்கு  தொகுதியில் மாநில துணைப்பொதுச்செயலாளர் அருளும் களம் இறங்குவார்கள் என்று கட்சியினர் முழுநம்பிக்கையுடன் உள்ளனர்.  ஆனால், முதல்வர் தனது மாவட்டத்தில் தற்போது அதிமுக வசமுள்ள இந்த 2 தொகுதிகளையும் விட்டுக் கொடுப்பாரா?  என்பதுதான்  அதிமுகவினர் மத்தியில் கேள்வியாக உள்ளது.

Related Stories: