×

நாலா பக்கம்:புதுவை - கேரளா - மேற்கு வங்கம் - அசாம்

பிரசாந்தா? பாஜ.வா? யார் சவால் வெல்லும்
மேற்கு வங்கத்தில் 34  ஆண்டு கால மார்க்சிஸ்ட் தொடர் ஆட்சியை 2011 தேர்தலில் முடிவுக்கு கொண்டு வந்தவர் மம்தா. கடந்த 10 ஆண்டுகளாக அவருடைய ஆட்சிதான் நடக்கிறது. இப்போது, 3வது முறையாக ஆட்சியை பிடிக்க முயன்று வருகிறார். அவருக்கு காங்கிரசோ, கம்யூனிஸ்ட்டுகளே இப்போது ஒரு பொருட்டாக இல்லை. ‘நேற்று பெய்த மழையில், இன்று முளைத்த காளான்’ என்பதுபோல், கடந்த 6 ஆண்டுகளாக இம்மாநிலத்தில் பாஜ.வின் வளர்ச்சி அசுரத்தனமாக உள்ளது. அதனால், இத்தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் போட்டி, ‘திரிணாமுல் - பாஜ’ இடையேதான் என்பதை பிரசார களம் காட்டுகிறது. தனது 3ம் முறை ஆட்சி கனவை நிறைவேற்றும் பொறுப்பை, பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரிடம் ஒப்படைத்துள்ளார் மம்தா. ‘பாஜ 99’ இடங்களுக்கு மேல் பிடித்தால் எனது தொழிலையே விட்டு விடுகிறேன்,’ என பிரசாந்தும் சவால் விட்டுள்ளார். பாஜ.வும் இவருக்கு வெற்றி எங்களுக்குதான் என சவால் விட்டுள்ளது. இறுதி வெற்றி யாருக்கு என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும்!!

புதிய வதந்தியால் அலறும் அஜ்மல்
வழக்கமாக பாஜ,வைத்தான் மதவாதக் கட்சி என்று மற்றவர்கள் விமர்சிப்பது வழக்கம். அசாமில் இந்த இமேஜ் பூமராங்காக மாறி, காங்கிரஸ் மீது விழுந்துள்ளது. காரணம், இஸ்லாமியர்களின் பிரதான கட்சியான ஏஐயுடிஎப், தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ளதுதான். ‘இஸ்லாமியர்களை வைத்து அரசியல் செய்யும் பத்ரூதீன் அஜ்மலுடன் கூட்டணி வைத்துள்ள நீங்கள்தான் மதவாத கூட்டணி,’ என்று காங்கிரஸ் மீது பாஜ குற்றச்சாட்டை வைத்துள்ளது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ், ‘2016 தேர்தலில் அஜ்மலுடன் நீங்கள் கூட்டணி வைத்தபோது, அது மதவாதமாக தெரியவில்லையா’ என்று ஆவேசமாக கேட்டுள்ளது. மதவாத கட்சி என்ற குற்றச்சாட்டை வைத்து பாஜ கிளப்பி விட்டிருக்கும் புதிய வதந்தியால் நொந்து போயுள்ளார் அஜ்மல்.

கட்சிக்காரங்க பேச்ச கேட்டா அவ்ளோ தான்
கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி தீ்க்காராம் மீனா ரொம்ப ரொம்ப கறார் பேர்வழியாம்… சமீபத்தில், கொல்லம் மாவட்டத்தில் நடந்த தேர்தல் அதிகாரிகளுக்கான கூட்டத்தில் பேசிய அவர், ‘கள்ள ஓட்டு போட உதவும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தபால் ஓட்டுகளை அதிகாரிகள் கொண்டு செல்லும்போது பாதுகாப்பு அதிகாரி ஒருவரும், வீடியோ கிராபர் ஒருவரும் கட்டாயம் உடன் இருக்க வேண்டும். ஓட்டு போடும் ஏரியாவுக்குள் வாக்காளரை தவிர வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது. அரசியல் கட்சியினர் வாக்குச் சாவடிகளுக்கு வரும் முன்பே அங்கு வருவது குறித்து தெரிவிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் எந்தவொரு அதிகாரியும் 100 சதவீதம் பராபட்சமின்றி செயல்பட வேண்டும். அரசியல் கட்சிகளின் பேச்சை கேட்டு நடக்கும் அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும்,’ என்று மனுஷன் மளமளவென்று அடுக்கடுக்கான உத்தரவு போட்டு இருக்காராம்… இதனால், அதிகாரிகள் மட்டுமில்லீங்கோ… அரசியல் கட்சியினரும் பீதியில் இருக்கறாங்களாம்…

கல்வி அமைச்சரவை வசைபாடிய நிர்வாகி
புதுச்சேரியில் 4 எம்எல்ஏ,க்களை இழுத்து காங்கிரஸ் அரசை பெரும்பான்மை இழக்கச் செய்த தெம்பில் உள்ள பாஜ., அடுத்தக்கட்டமாக சில  சமூக அமைப்புகளை கையில் போட்டுக் கொண்டு திரைமறைவில் அடுத்தக்கட்ட  நகர்வுகளை அரங்கேற்றி வருகிறது. கல்வி அமைச்சர் கமலக் கண்ணனை சமீபத்தில் ஒரு அமைப்பின் நிர்வாகி, செல்போனில்  தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ, தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. சில அரசு பள்ளிகளுக்கு தலைவர்களின் பெயர்களை  சூட்டியதில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த தலைவரின் பெயர் முழுமையாக  குறிப்பிடாமல் அரைகுறையாக பதிவிட்டு அரசாணை வெளியிட்டு இருப்பது தொடர்பாக, அந்த நபர் எடாகூடமாக கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு கூலாக பதிலளிக்கும் அமைச்சர், ‘முறையான பதிவு இருந்தால் கொடுங்க... மாற்றிவிடலாம்...’ என  பதிலளிக்கவே டென்ஷனான அந்த நிர்வாகி, அமைச்சரை சிறிது நேரம் வசைபாடி விட்டு இணைப்பை துண்டிக்கிறார். இது, பாஜ.வின் ்வேலைதான் என அமைச்சரின் ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர்.

Tags : Kerala ,New Delhi ,Assam ,West Bengal , Mamata Banerjee ended 34 years of Marxist rule in West Bengal in the 2011 elections.
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...