அடுக்குமாடி குடியிருப்புகளில் பாதிப்பு: பெங்களூருவில் மீண்டும் பரவும் கொரோனா: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அறிவிக்க அரசு முடிவு

பெங்களூரு: பெங்களூருவில் ஐந்து மாதங்களுக்கு பின் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அறிவிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பாசிடிவ் இந்தியாவிலும் ஆதிக்கம் செலுத்தியது. நோயை கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசின் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்ெ்காண்டுவந்ததின் பலனாக ஓரளவுக்கு தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த 5 மாதங்களாக கர்நாடக மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைவாக இருந்ததுடன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது.

இதனிடையில் கடந்த வாரம் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பலருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் மாநகரில் உள்ள சில மாணவர் விடுதியில் தங்கியுள்ளவர்களுக்கும் தொற்று பாதிப்பு இருந்தது. இதில் விழித்து கொண்டு சுகாதாரத்துறை, தொற்று பரவலை தடுப்பதற்கான முயற்சியை புயல் வேகத்தில் தொடங்கியுள்ளது. ரேண்டம் மற்றும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளையும் துரிதப்படுத்தியுள்ளது.

மாநில சுகாதாரத்துறையின் உத்தரவின்பேரில் பஸ், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பரிசோதனை நடத்தும் பணி தொடங்கியுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா போராளி படையில் இருக்கும் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் முயற்சியிலும் சுகாதார துறை ஈடுப்பட்டு வருகிறது. இதனிடையில் மாநகரில் இயங்கிவரும் கல்வி நிலையங்கள், மாணவர் விடுதிகளில் 5 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அந்த பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்க முடிவு செய்துள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டால், 7 நாட்களுக்கு பின் அப்பகுதியில் உள்ளவர்களை கட்டாயம் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய ேவண்டும், கல்லூரி நுழைவு வாயிலில் சானிடைசர் பயன்படுத்த வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், காய்ச்சல், சளி போன்ற பாதிப்புடன் வரும் மாணவர்களை கண்காணித்து, சந்தேகம் இருக்கும் பட்சத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதிக நேரம் மாணவர்களை பள்ளி, கல்லூரிகளில் வைத்திருக்காமல் தவிர்க்க வேண்டும் என்பது உள்பட பல வழிகாட்டுதல்கள் பிறப்பித்துள்ளது.

மாநகரில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் மாணவர் விடுதிகளில் கட்டாயம் ஒரு கண்காணிப்பு அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் மாடல் ேகாவிட் சென்டர் அமைத்து, இதில் நர்ஸ் உள்ளிட்ட கொரோனா போராளிகள் மற்றும் பரிசோதகர்கள் நிரந்தரமாக பணி அமர்த்தும் யோசனையும் உள்ளதாக தெரிகிறது. கொரோனா இரண்டாவது அலை பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்தாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதார துறை முதன்மை செயலாளர் கே.வி.திரிலோகசந்தர் தெரிவித்தார்.  மேலும் அவர் கூறுகையில், கொரோனா தொற்று பரவலை தடுப்பது மற்றும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வது தொடர்பாக மீடியாக்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. தைரியமாக போட்டு கொள்ள வேண்டும். கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்து விட்டதாக நினைத்த நிலையில், பெங்களூருவில் மீண்டும் பலருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடராமல் தடுக்க வேண்டுமானால், அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். கோவிட்-19 விதிமுறைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மத்திய, மாநில சுகாதார துறை பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

Related Stories:

>