கோலார் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி இருக்க வேண்டும்: மாவட்ட பஞ்சாயத்து சிஇஓ உத்தரவு

கோலார்: பத்தாம் வகுப்பு இறுதி தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி மாவட்டத்தில் கிடைக்கும் வகையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும் என்று மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயலதிகாரி என்.எம்.நாகராஜ் தெரிவித்தார். கோலார் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் சிஇஓ தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, பத்தாம் வகுப்பு தேர்வு கண்காணிப்பு அதிகாரி நாகேந்திர பிரசாத், கல்வி அதிகாரி அசோக், வட்டார கல்வி அதிகாரிகள் நாகராஜ்கவுடா, கெம்பையா, சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில் நாகராஜ் பேசும்போது, கொரோனா தொற்று சமயத்திலும் நமது மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது. வரும் மே மாதம் நடக்கும் பத்தாம் வகுப்பு இறுதி தேர்வில் அரசு, அரசு மானியம் பெறும் மற்றும் மானியம் பெறாத உயர்நிலை பள்ளிகளில் தேர்வு எழுதவும் மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும். இப்போதிலிருந்தே அதற்கான முயற்சியை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். நடப்பு கல்வியாண்டின் காலம் குறைவாகவுள்ளது. இருப்பினும் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

கடந்த மூன்றாண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்வில் முதல்மொழி கன்னடம், இரண்டாவது மொழி ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களின் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மட்டுமில்லாமல், மதிப்பெண்ணும் குறைவாகவுள்ளது. வரும் தேர்வில் இதை சரி செய்ய வேண்டும். உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கண்ட மூன்று வகுப்புகளின் பாடங்களை கண்காணிக்க வேண்டும். சிறப்பு கோச்சிங் கொடுத்து மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும்.

மேலும் பள்ளிகளில் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகுப்பறை சுத்தமாக இருக்க வேண்டும். சமீப காலமாக பழைய கட்டடிங்கள் உள்ள வகுப்பறைகளில் குளிரான சீதோஷண நிலை இருப்பதால் மாணவர்கள் சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி இருந்தால் வகுப்பறை மாற்றம் செய்ய வேண்டும். பள்ளி சுற்றுசுவர் அமைப்பது, சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து ெகாடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்’’.

Related Stories:

>