×

தமிழர்கள் கைவண்ணத்தில் உருவான துங்கபத்ரா அணை: முக்கண் சிவலிங்கம் தரும் அமிர்தம்: ஹொஸ்பேட்டை பெருமைக்கு சான்று

கர்நாடக மாநில வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ள ஹம்பி உள்பட பல நினைவு சின்னங்கள் ஹொஸ்பேட்டை தாலுகாவின் பெருமைக்கு சான்றாக விளங்குகிறது. கர்நாடகா-ஆந்திரா மாநில எல்லையில் உள்ளது பல்லாரி மாவட்டம். நாடு சுதந்திரம் பெற்று மொழிவழி மாநிலம் உருவாக்கும் வரை சென்னை மாகாணத்தில் கீழ் இப்பகுதிகள் இயங்கிவந்தது. மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட பின் கர்நாடக மாநிலத்தில் இணைக்கப்பட்டது. இந்தியாவில் மன்னர்கள் ஆட்சி நடந்த சமயத்தில் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட கிருஷ்ணதேவராய மன்னர்களின் விஜயநகர பேரரசு கடந்த 1336 முதல் 1535 வரை இப்பகுதியை ஆட்சி செய்ததுடன் ஹொஸ்பேட்டை நகரை தலைநகரமாக கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் விஜயபுரா மற்றும் விருபாட்சிபுரா என்ற அழைக்கப்பட்டாலும் துங்கபத்ரா நதி பாய்வதால் ‘‘பம்பா’’ என்று அதற்கு முன் அழைக்கப்பபட்டாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜயநகர பேரரசு:- கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் ஹம்பி வீதியில் தங்க, வைர ஆபரணங்கள் விற்பனை செய்யும் சந்தை நடந்துள்ளது. பல பாளையங்களை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் எடைகள் போட்டு தங்க, வைர ஆபரணங்களை ஹம்பி வீதியில் வாங்கி சென்ற வரலாறு உள்ளது. இப்படி வரலாற்று சிறப்புமிக்க ஆபரண சந்தை வழி தடத்தில் கிருஷ்ணதேவராயர் விருப்பாட்சேஷ்வரசுவாமி கோயில் கட்டினார். மேலும் ஹொஸ்பேட் பகுதியை சுற்றி பல கோயில்கள் சிற்ப கலை நயத்துடன் கட்டினார். தேவராயரின் ஆட்சி காலம் முடிந்தபின் விஜயநகர பேரரின் அதிகாரம் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து இறுதியில் இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் சென்று விட்டது. ஹம்பியில் உள்ள விருபாட்சேஷ்வரசுவாமி கோயிலை மையமாக வைத்து அதை சுற்றி சூர்யன் அஸ்தமனமாகும் நினைவு சின்னங்கள், அச்சுதராயன் கோயில், ஆனேகொந்தி, அஞ்சனாத்ரி மலை, துங்கபத்ரா நதி, துங்கபத்ரா அணை, புரந்தரதாசர் மண்டபம், விஜயவிட்டல தேவஸ்தானம், வரலாற்று சிறப்புமிக்க கல்தேர், உக்ரநரசிம்மசாமி கோயில், கடலைகாளு கணபதி கோயில், சாசிவேகாளு கணபதி கோயில், ஹம்பி பஜார், ஹெமாகோட்டை உள்பட பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் உள்ளது.

ஏழை லிங்கம்:- புகழ் பெற்ற லட்சுமிநரசிம்மசாமி கோயில் அருகில் முக்கண்களுடன் கூடிய லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கால்வாய் ஓரத்தில் உள்ள லிங்கத்தை தொட்டு வரும் தண்ணீர் குடிப்பதற்கு அமிர்தம்போல் உள்ளதால், அதை சக்தி மிக்க லிங்கமாக மக்கள் பூஜிக்கிறார்கள். ஹம்பி என்ற பழங்குடி இனத்தை சேர்ந்த ஏழை ஓருவன் தனது ஆசைகளை நிறைவேற்றினால் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்வதாக சிவபெருமானிடம் வேண்டி கொண்டதாகவும் ஏழையின் ஆசையை ஈசன் நிறைவேற்றியதால் வேண்டி வரமளித்த பரமாத்மனுக்கு முக்கண்கள் கொண்ட சிவலிங்கத்தை ஒரு பெண் விவசாயின் மூலம் வடித்து பிரதிஷ்டை செய்ததாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடுகுவிதை கணேஷன் கோயில்:-ஹொஸ்பேட்டை தாலுகாவில் உள்ள மற்றொரு புகழ் பெற்ற ஹெமகோட்டை மலையில் காசிவேகாளு கணேஷ (கடுகுவிதை கணேசன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் கடுகு பயிர் செய்வதால் அதை நினைவுப்படுத்தும் வகையில் கணபதிக்கு சிலை பிரதிஷ்டை செய்துள்ளனர். அளவுக்கு அதிகமாக உணவு எடுத்து கொண்ட விக்னேஷ்வரருக்கு தாங்க முடியாத வயிற்று வலி வந்து, வயிறு கிழியும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதை தடுக்க பாம்பை வயிற்றில் சுற்றி கொண்டாராம். அதை பிரதிபலிக்கும் வகையில் சிலை வடித்த பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என புராணங்கள் கூறுகிறது.

புகழ் பெற்ற ஆனேகுந்தி:- ஹம்பி நகரில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் ஆனேகுந்தி கிராமம் உள்ளது. துங்கபத்ரா நதியின் வடபுறத்தில் உள்ளது இது விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் நுழைவு தலைநகரமாக விளங்கியதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனேகுந்தி என்றால் யானைகள் பாதுகாப்பு மையம் என்று பொருளாகும். இந்த இடம் ஹம்பியை காட்டிலும் மிகவும் பழமையானது. குறிப்பாக சொல்ல போனால் ராமாயணம் காலத்தில் இருந்துள்ளது. ராமாயண காவியத்தில் முக்கிய பாத்திரமாக கருதப்படும் சுக்ரிவா (வாணர்களின் தலைவன்) ஆட்சி செய்த பகுதி என்று அழைக்கப்படுகிறது. அதையொட்டி அஞ்சனாத்ரி மலை உள்ளது. இதை அனுமந்தர் பிறந்த இடம் என்று புராணங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழர்கள் கை வண்ணத்தில் துங்கபத்ரா அணை:- ஐதராபாத்-கர்நாடக பகுதியில் உள்ள பல்லாரி, கர்னூல், கடப்பா, ராயலசீமா உள்ளிட்ட வறட்சி பாதித்த பகுதிகளுக்கு நீர்பாசன வசதி ஏற்படுத்தும் நோக்கத்தில் சென்னை மாகாண ஆட்சி நிர்வாகத்தில் பொறியாளராக இருந்த ஆர்த்தர் காட்டோன் கடந்த 1860ம் ஆண்டு துங்கபத்ரா நதியின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை உருவாக்கினார். ஐதராபாத் மாகாணத்தில் பொறியாளராக இருந்த என்.பரமேஷ்வரன்பிள்ளை திட்டத்தில் சில மாற்றங்கள் செய்து திட்ட வரைவு தயாரித்தார். அதை தொடர்ந்து சென்னை மாகாணம் மற்றும் ஐதராபாத் மாகாண ஆட்சி நிர்வாகம் கூட்டாக இத்திட்டம் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. சென்னை மாகாணத்தின் தலைமை பொறியாளர் எம்.எஸ்.திருமலை அய்யங்கார் மற்றும் ஐதராபாத் மாகாணத்தில் தலைமை பொறியாளராக இருந்த வெங்கடகிருஷ்ண அய்யர் ஆகியோர் இந்த அணை கட்டும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கடந்த 1942ம் ஆண்டு கையெழுத்திட்டனர். பின் கடந்த 1945 பிப்ரவரி 28ம் தேதி  துங்கபத்ரா அணை கட்டும் பணி தொடங்கப்பட்டது.

துங்கபத்ரா அணை கட்டும் பணிக்கான பொறுப்பை சென்னை மாகாண பொறியாளர் எம்.எஸ்.திருமலை அய்யங்கார் கையில் ஒப்படைக்கப்பட்டது. அவர் தமிழகத்தில் உள்ள கட்டுமான துறையில் வல்லுனர்களாக இருந்தவர்கள், கட்டுமான தொழிலாளர்களை ஆயிரகணக்கில் அழைத்து வந்து அவர்கள் மூலம் குறித்த காலத்திற்குள் அணை கட்டும் பணியை முடித்தார். தமிழர்களின் கை வண்ணத்தில் கட்டி முடிக்கப்பட்ட துங்கபத்ரா அணை தற்போதும் கம்பீரமாக காட்சியளிப்பதுடன் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. இக்கட்டுமான பணியில் ஈடுப்பட்ட தமிழ் தொழிலாளர்கள் தற்போதும் அணை பகுதியில் வசித்து வருகிறார்கள். கன்னட மண்ணில் வாழ்ந்தாலும் தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தை போற்றி பாதுகாத்து வருகிறார்கள்.

Tags : Tungapadra Dam ,Tamils ,Hospet , Tamils, Tungapadra Dam, Mukkan Sivalingam, Amritham
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு