×

மைசூருவில் சாட்டிலைட் டவுன்ஷிப் திட்டம் என்னாச்சு?

மைசூரு: மைசூரு மாநகரில் சாட்டிலைட் டவுன்ஷிப் அமைக்கும் திட்டம் இன்னும் கிடப்பில் உள்ளது. மைசூரு  மாகாணத்தை ஆட்சி செய்த உடையார் மன்னர்களின் தலைநகராக விளங்கும் மைசூரு,  மாநிலத்தின் ஹெரிடேஜ் நகரம் என்ற பெருமையும் கொள்கிறது. மைசூரு-குடகு இரு  மாவட்டங்களை உள்ளடக்கிய மக்களவை தொகுதியில் காங்கிரஸ், பாஜ, மஜத கட்சிகள்  சம பலத்துடன் உள்ளன.

மூன்று கட்சிகளை சேர்ந்தவர்கள் இத்தொகுதியில் இருந்து  எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர்கள் தேவராஜ் அரஸ்,  சித்தராமையா ஆகியோரின் ஆதிக்கமும் இத்தொகுதியில் இருக்கிறது. இருந்தும்  பெங்களூரு மாநகருக்கு இணையாக மைசூரை தரம் உயரத்த வேண்டும் என்ற திட்டம்  மட்டும் இன்னும் முழுமை பெறவில்லை. தென்மேற்கு ரயில்வே கோட்டத்தில்  மைசூரு ஒரு மண்டலமாக இருந்தாலும் ஹுப்பள்ளியுடன் ஒப்பிடும்போது, ரயில்  திட்டங்கள் செயல்படுத்துவதில் பின்தங்கியுள்ளது. மைசூருவில் இருந்து  நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களுக்கும் ரயில் இயக்கப்படும் என்று இதற்கு  முன் தொகுதி எம்பியாக இருந்த சி.எச்.விஜயசங்கரும், தற்போதைய எம்பியுமான  பிரதாப்சிம்ஹாவும் கொடுத்த வாக்குறுதிகள் செயல்படுமல் நிலுவையில் உள்ளது.

பெங்களூரு  மாநகரில் உள்ளது போல் மைசூருவிலும் தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்ப  வளர்ச்சி ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதியும் முழுமையாக  செயல்படுத்தவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஐடி கம்பெனிகள் மட்டுமே  இயங்கி வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் பொதுதுறை நிறுவனங்கள் சொல்லிக்  கொள்ளும் வகையில் இல்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. கடந்த  2014ல் தேர்தலின் போது பாஜ வேட்பாளராக போட்டியிட்ட பிரதாப் சிம்ஹா,  மைசூருவில் சாட்டிலைட் டவுன் ஷிப் அமைக்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதி  இன்னும் காகிதத்தில் மட்டுமே உள்ளதாக மக்கள் குறை சொல்கிறார்கள்.

Tags : Mysore , Mysore, Satellite Township Project
× RELATED நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து...