அயோத்தி ராமர் கோயில் பெயரில் பகல் கொள்ளை: குமாரசாமி மீண்டும் சர்ச்சை கருத்து

பெங்களூரு: ராமர் கோயில் கட்டுவதற்காக மக்களிடன் நன்கொடை என்ற பெயரில் பகல் கொள்ளை அடித்து வருவதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டினார். பெங்களூருவில் உள்ள மஜத தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில், உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அக்கோயில் அமைக்க மத்திய அரசு மற்றும் உத்தரபிரதேச மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி. உள்ளிட்ட அமைப்புகள் கோயில் கட்டுவதில் பக்தர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற முழக்கத்தை கையில் எடுத்தனர்.

அதன்படி நன்கொடை வசூல் செய்து வருகிறார்கள். இப்படி நன்கொடை வசூலிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கியது யார்? நன்கொடை வசூலிக்க என்ன வழிகாட்டுதல்கள் அறிவித்துள்ளனர். இந்தியா அளவில் ரூ.1,500 கோடிக்கு மேலும் கர்நாடகாவில் ஏறக்குறைய ரூ.100 கோடி வரை நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இப்படி கோடிக்கணக்கில் நன்கொடை வசூலிக்கும் போது இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் பெற வேண்டியது அவசியம் தானே.

மத்தியிலும் மாநிலத்திலும் பாஜ ஆட்சி இருக்கிறது என்ற தைரியத்தில் நினைத்தவர்கள் எல்லாம் நன்கொடை வசூல் என்ற போர்வையில் இறங்கியுள்ளது என்ன நியாயம்? வசூலிக்கும் பணத்திற்கு கணக்கு காட்ட வேண்டாமா? இதை நான் கேட்டால், இந்து விரோதி என்று குற்றம்சாட்டுகிறார்கள். அப்படியானால் யாரும் கேள்வி கேட்ககூடாதா? தேவகவுடா குடும்பத்தினர் எப்போதும் சாதி மற்றும் மதத்தின் பெயரில் அரசியல் செய்பவர்கள் இல்லை’’ என்றார்.

இதனிடையில் குமாரசாமியின் கருத்துக்கு பாஜ தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைச்சர்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா, சி.பி.யோகேஷ்வர், எம்எல்ஏகள் எம்.பி.ரேணுகாச்சார்யா, எச்.விஸ்வநாத், மாநில பாஜ தலைவர் நளின்குமார் கட்டீல், எம்பிகள் ேஷாபாகரந்தலஜே. அனந்த்குமார் தேஜேஸ்வி உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>