விரைவில் சட்டமன்ற தேர்தல் கலெக்டர்களுடன் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், இன்று மாலை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த வாரம் சென்னை வந்தார். அவர் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசினர். அப்போது, தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதையடுத்து தமிழகத்தில் தேர்தல் குறித்த அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழக தலைமை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கூடுதலாக வாக்குச்சாவடி மையங்களை கண்டறியும் பணி, தேர்தல் அலுவலர்களை நியமிக்கும் பணி உள்ளிட்ட தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளோடு நாளை (இன்று) மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளேன். கடந்த வாரம் தமிழகம் வந்த இந்திய தேர்தல் ஆணைய குழு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதனை முறைப்படி செயல்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனையின்போது விவாதிக்கப்படும்.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான  சோதனைகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு முறையை கண்காணிக்க ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் குறைந்தது 10 அதிகாரிகள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>