கடலூரில் ரவுடி தலையை துண்டித்து கொன்று தப்பி ஓடிய பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டு கொலை: பண்ருட்டி அருகே பரபரப்பு

பண்ருட்டி: கடலூரில் ரவுடியை வெட்டிக் கொன்ற வாலிபரை போலீசார் பண்ருட்டி அருகே என்கவுன்டரில் சுட்டு கொன்றனர். கடலூர் மாவட்டம், கடலூர் சுப்புராயலு நகரை சேர்ந்தவர் கனகராஜ் மகன் வீரா (எ) வீராங்கையன் (28). ரவுடியான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு பைக்குகளில் வந்த 10 பேர் கும்பல் அவரை வெட்டி கொலை செய்து விட்டு, தலையை துண்டித்து எடுத்துச் சென்றது. இது குறித்து தகவல் அறிந்த எஸ்பி ஸ்ரீஅபிநவ், கடலூர்எஸ்பி சாந்தி மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் வீராவை கொலை செய்த கும்பல், துண்டித்த தலையுடன் பண்ருட்டி புதுப்பேட்டை சிறுகிராமம், குடுமியான்குப்பம் வீரப்பார் ஆகிய கிராம பகுதி வழியாக கார் மற்றும் பைக்கில் தப்பிச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பண்ருட்டி - சேலம் மெயின் ரோட்டில் வீரப்பார், உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் ஆகிய இடங்களில் வாகனங்களில் வந்த நான்கு நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள், கடலூர் ரவுடி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும், கடலூர் பகுதியை சேர்ந்த ரமணன், ராஜசேகர், சுதாகர் அருள்பாண்டியன் என்பதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின்படி கடலூர் குப்பங்குளம் தெருவில் உள்ள சதீஷ்குமார் என்பவர் வீட்டில் வீராவின் தலை இருப்பதை அறிந்த போலீசார் அதனை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, சேலம் மெயின் ரோட்டில் மற்றொரு நபர் பைக்கில் தப்பி செல்வதாக கிடைத்த தகவலின்படி புதுப்பேட்டை போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது குடுமியான்குப்பம் மலட்டாற்றில் அவர் மறைந்து இருந்தது தெரியவந்தது. போலீசாரை கண்டதும், கொலையாளி அங்கிருந்த சிறு பாலத்தில் தப்பிச் செல்ல முயன்றார். சப்-இன்ஸ்பெக்டர் தீபன், சினிமா பாணியில் பாலத்தில் இருந்து கீழே குதித்து அவரை பிடிக்க முயன்றார்.

அப்போது கொலையாளி அவரை கத்தியால் தாக்கினார். உடனே தான் வைத்திருந்த துப்பாக்கியால் சப்-இன்ஸ்பெக்டர் சுட்டார். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவர் கடலூர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் கிருஷ்ணன் (32) என்பதும், கடலூர் ரவுடி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும் தெரியவந்தது. தகவலறிந்த விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன் கடலூர் எஸ்பி ஸ்ரீஅபிநவ் ஆகியோர் வந்து பார்வையிட்டனர். பின்னர் கிருஷ்ணன் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் தீபன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ரவுடி சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தை ஐஜி சந்தோஷ்குமார், பண்ருட்டி நீதிபதி மணிவர்மன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பைக், வெள்ளி செயின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ரவுடி தலையை வெட்டி கொல்லப்பட்டதும், சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதும் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* 10 பேர் மீது வழக்கு

ரவுடி கொலை குறித்து போலீசார் கூறுகையில், குப்பங்குளம் தெருைவ சேர்ந்த சதீஷ்குமார் கடந்த 2015ல் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் வீரா முக்கிய குற்றவாளியாக இருந்தார். இதனால் சதீஷ்குமார் நண்பர் கிருஷ்ணாவுக்கும் வீராவுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. எனவே பழிக்கு பழவாங்கும் வகையில் வீரா கொலை நடந்திருக்கலாம் என தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக திருப்பாதிரிபுலியூர் போலீசார், கடலூர் மார்க்கெட் காலனியை சேர்ந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் அருண்பாண்டியன் (24), சுதாகர்(23), ரஜசேகர்(25), ரமணன்(24) ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். ரவுடி கிருஷ்ணன் (30) என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டுள்ளார். மற்ற 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

* இரண்டாவது என்கவுன்டர்

ரவுடியை சுட்டுக் கொன்ற சப்-இன்ஸ்பெக்டர் தீபன் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் ஏபி குப்பம் பகுதியில் சாராயம் விற்றவர்களை பிடிக்க சென்றபோது கத்தியால் தாக்கப்பட்டார்.

இருப்பினும் சாராயம் விற்றவரை கைது  செய்தார். மேலும் சென்னையில் ஒரு என்கவுன்டர் செய்த நிலையில் தற்போது 2வதாக நேற்று என்கவுன்டர் செய்துள்ளார்.

Related Stories:

More
>