×

பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு: பாஜ-அதிமுக அரசுகளை கண்டித்து பிப். 22ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வரலாறு காணாத பெட்ரோல், டீசல் - காஸ் சிலிண்டர் விலை உயர்வைச் செய்திருக்கும் பாஜ-அதிமுக அரசுகளைக் கண்டித்தும், உடனடியாக விலை குறைப்பு செய்ய வலியுறுத்தியும், திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: காஸ் சிலிண்டரின் விலையை ரூ.787.50க்கு உயர்த்தி, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக இல்லத்தரசிகளுக்கு ஒரு ‘அதிர்ச்சி’ பரிசை அளித்து விட்டுச் சென்றது வேதனையளிக்கிறது. காஸ் சிலிண்டரின் விலை மற்றும் பெட்ரோல் டீசல் விலையையும் கண்மூடித்தனமாகச் செங்குத்தாக உயர்த்தி வரும் பாஜ செயல் கடும் கண்டனத்திற்குரியது. அதிமுகவின் ஆட்சியில் இன்றைக்கு, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 91.19 ரூபாய். டீசல் விலை 84.44 ரூபாய். முரட்டுத்தனமான இந்த விலை உயர்வு அனைத்துத் தரப்பு மக்களையும் மிரட்டிக் கொண்டிருக்கிறது.

மத்திய பா.ஜ. அரசு பெட்ரோல் - டீசல் மீது 20 லட்சம் கோடி ரூபாய்க்குக் கலால் வரி விதித்தது முதல் காரணம் என்றால் - அ.தி.மு.க. அரசு - அதுவும் முதலமைச்சர் பழனிசாமி, கொரோனா காலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 3.25 ரூபாயும், டீசல் விலை 2.50 ரூபாயும் அதிகரிக்கும் வகையில் “வாட் வரி” விதித்தது இந்த விஷம் போன்ற விலை உயர்விற்கு மற்றொரு காரணம். மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோத மனப்பான்மையால், கடந்த ஆறு ஆண்டுகளில் கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேசச் சந்தையில் 50 சதவீதம் குறைந்த நிலையிலும் - அந்த விலைக் குறைப்பின் பயனில் ஒரு பைசாவைக் கூட மக்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு அளிக்கவில்லை, தனது கஜானாவிலேயே தக்க வைத்துக் கொண்டது. போதாக்குறைக்கு, கொரோனா காலத்தில் கூட வருவாயைப் பெருக்க  பெட்ரோல், டீசல் மீது கலால் வரி போட்டு, 39 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது, மத்திய பா.ஜ. அரசு.

இவ்வளவு லட்சம் கோடி ரூபாய் கலால் வரி வசூல் எங்கு போனது என்பதும், இதுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாய்க்கு போடும் போது, அதில் 18 ரூபாய் செஸ் வரி சாலை மேம்பாட்டிற்குப் போகும்போது, எதற்குச் சுங்கச்சாவடிக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதில் ‘பாஸ்டேக்’ இல்லை என்றால் மூன்று மடங்கு வசூல் செய்யப்படும் என்ற எச்சரிக்கை வேறு. மோடி அரசு மக்களை வஞ்சிக்கும் அரசு என்பது தெளிவாகத் தெரிகிறது. கலால் வரியால் ஏழை - எளிய, நடுத்தர மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. தினமும் பெட்ரோல் - டீசல் விலை போட்டி போட்டுக் கொண்டு பந்தயக் குதிரை போல் எகிறுகின்ற இந்த நேரத்தில் - சமையல் எரிவாயு விலையோ தாவிக்குதித்துச் செல்கிறது.  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 414 ரூபாய் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, ரூபாய் 787.50 ஆக உயர்ந்ததுகூட தங்கள் கண்ணுக்குத் தெரியாதது போல் பாஜவினர் ஆட்சி செய்து - மக்களை வாட்டி வதைத்து வருவது கவலையளிக்கிறது.

எனவே, வரலாறு காணாத பெட்ரோல் - டீசல் விலை, சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டும் காணாமலும் இருக்கும் அதிமுக - பாஜக அரசுகளைக் கண்டித்தும் - கலால் வரியை ரத்து செய்து விலை குறைப்பு நடவடிக்கைகளை உடனடியாக மத்திய பா.ஜ அரசு மேற்கொண்டு மக்களின் இன்னல்களைப் போக்க முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், திமுக சார்பில் பிப்ரவரி 22ம் நாள் (திங்கள்கிழமை) அன்று காலை 9 மணி அளவில், மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெருமளவில் மகளிர், வணிகர்கள், சரக்கு போக்குவரத்து தொழிலில் உள்ளோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள வேண்டும் அனைவரையும் திமுக சார்பில் அழைக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : MK Stalin ,gas cylinder price hike ,AIADMK Protest ,BJP ,announcement ,DMK , Petrol, diesel, gas cylinder price hike: BJP condemns AIADMK Protest on the 22nd: DMK leader MK Stalin's announcement
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...