×

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது: 26ம்தேதி தேரோட்டம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 26ம்தேதி தேரோட்டம் நடக்கிறது. அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி  திருக்கோயிலில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கியது. இதையொட்டி அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகத்தை தொடர்ந்து மற்ற கால பூஜைகள்  நடைபெற்றது.

பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து 5.20 மணிக்கு சந்தோஷ்பட்டர் தலைமையில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பலவகையான அபிஷேகம், அலங்காரத்தை தொடர்ந்து 6.35 மணிக்கு மகாதீபாராதனை  நடந்தது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கோயில் செயல் அலுவலர் விஷ்ணுசந்திரன், திருவாவடுதுறை ஆதினம் தக்கலை அம்பலவானசுவாமிகள், கோயில் உதவி ஆணையர் செல்லத்துரை, கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன்,  ஆனந்தன், மாரிமுத்து, ராஜமோகன், மணியன் சுரேஷ், பேரூராட்சி முன்னாள் தலைவர் சுரேஷ்பாபு, ஒன்றிய பொருளாளர் பழக்கடைதிருப்பதி, நகர செயலாளர் மகேந்திரன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட  திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா வரும் 28ம்தேதி வரை நடக்கிறது.

இன்று மாலை 4.30 மணிக்கு தங்கச்சப்பரத்தில் அப்பர் சுவாமிகள் எழுந்தருளி திருவீதிகளில் உழவாரப்பணி செய்து கோயில் சேர்தல், இரவு 7 மணிக்கு ஸ்ரீபெலிநாயகர் அஸ்திரத்தேவருடன் தந்தப்பல்லாக்கில் கோயிலிருந்து புறப்பட்டு ஒன்பது  சந்திகளிலும் உலா வந்து திருக்கோயில் சேர்தல். 5ம் திருவிழாவான 21ம்தேதி இரவு 7.30மணிக்கு சிவன் கோயிலில் குடவருவாயில் தீபாராதனையாகி குமரவிடங்கபெருமான் சுவாமியும், தெய்வானை அம்பாள் தனித் தனியாக தங்கமயில்  வாகனங்களில் எழுந்தருளுகிறார்.

22ம்தேதி 6ம் திருவிழா இரவு 8மணிக்கு சுவாமி வெள்ளித்தேரிலும், அம்மன் இந்திர விமானத்திலும் எழுந்தருளுக்கின்றனர். 7ம் திருவிழாவான 23ம்தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் திருக்கோயிலில் சண்முகப்பெருமான்  உருகு சட்டசேவையும், காலை 9 மணிக்குள் சுவாமி ஆறுமுகநயினார் சண்முக விலாசத்திலிருந்து வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி மண்டகப்படி சேருகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்ததும், மாலை 4.30  மணிக்கு மேல் தங்கச்சப்பரத்தில் சிவப்புசாத்தியில் எழுந்தருளுகின்றார்.

8ம்திருவிழா 24ம்தேதி அதிகாலை 5 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் பெரிய வெள்ளி சப்பரத்திலும், பகல் 12 மணிக்கு பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளுகிறார். 10ம் திருவிழா 26ம்தேதி காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருத்தேர்  வடம்பிடித்தல் நடைக்கிறது. முதலில் விநாயகர், அடுத்து சுவாமி, பின்னர் அம்மாள் தேர்கள் இழுக்கப்படுகின்றன. 11ம் திருவிழா 27ம்தேதி இரவில் தெப்ப உற்சவம் நடக்கிறது. 28ம்தேதி 12ம் திருவிழா மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு  நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி, அம்மன் மலர்கேடயச் சப்பரத்தில் எழுந்தளுகிறார். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகஸ்தர்கள் செய்து வருகின்றனர்.


Tags : Thiruchendur Subramaniyaswamy Temple Mass Festival ,26th Therottam , Thiruchendur Subramaniyaswamy Temple Mass Festival begins today with flag hoisting: 26th Election
× RELATED பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை