×

சிறிய நகரங்களில் தொழில் தொடங்க ஐ.டி. நிறுவனங்கள் முன்வர வேண்டும் : பிரதமர் மோடிவேண்டுகோள்!!

டெல்லி : பிரதமர் திரு நரேந்திர மோடி, நாஸ்காம் தொழில்நுட்ப மற்றும் தலைமைத்துவ மன்றத்தில் (என்டிஎல்எஃப்) காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கொரோனா காலத்தில் விரிவாற்றலினால் மீண்டெழுந்த தகவல் தொழில்நுட்பத் துறையைப் பாராட்டினார். “சிப்கள் செயலிழந்த போது, உங்களது குறியீடுகள், செயல்களை தொடர்ந்து இயக்கி வந்தன”, என்று பிரதமர் கூறினார். வளர்ச்சி குறைபாடு ஏற்பட்டிருந்த காலத்திலும் இந்த துறையில் 2 சதவீத வளர்ச்சியும், கூடுதலாக 4 பில்லியன் டாலர் வருவாயும் ஏற்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

இன்றைய இந்தியா, வளர்ச்சியை எதிர்நோக்கி இருப்பதாகவும், இந்த மனநிலையை அரசு அறிந்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 130 கோடி இந்தியர்களின் லட்சியங்கள் நம்மை அதி விரைவாக முன்னேறச் செய்வதாக அவர் தெரிவித்தார். தனியார் துறையினரும் அரசைச் சார்ந்தவர்கள் என்பதால் புதிய இந்தியா குறித்த எதிர்பார்ப்பு அவர்களிடமும் ஏற்பட்டிருப்பதாக பிரதமர் கூறினார். எதிர்கால தலைமைத்துவத்தின் வளர்ச்சிக்கு கட்டுப்பாடுகள் உகந்ததல்ல என்பதை அரசு உணர்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார். தேவையற்ற கட்டுப்பாடுகளிலிருந்து தொழில்நுட்பத்துறைக்கு விலக்கு அளிக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தேசிய தொலைத்தொடர்பு கொள்கை, சர்வதேச மென்பொருள் முனையமாக இந்தியாவை மாற்றுவதற்கான கொள்கை, கொரோனா காலத்தில் வெளியிடப்பட்ட இதர சேவைகள் வழங்கும் தொழில்களுக்கான நெறிமுறைகள் போன்று அண்மைக்காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பிரதமர் பட்டியலிட்டார். 12 முக்கிய சேவை துறைகளுள் தகவல் சேவையையும் இணைத்ததன் வாயிலாக நல்ல பலன் கிடைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். வரைபடங்கள் மற்றும் புவிசார் தரவுகள் அண்மையில் தாராளமயமாக்கப்பட்டிருப்பதன் மூலம் தொழில்நுட்ப புதுமை நிறுவனங்களுக்கான சூழலியல் வலுவடைவதுடன் தற்சார்பு இந்தியா இயக்கமும் விரிவடையும்.

புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் சுதந்தரம் இளம் தொழில்முனைவோருக்கு கிடைக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். புதுமை நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் மீது அரசு முழு நம்பிக்கை வைத்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார். டிஜிட்டல் இந்தியா வாயிலாக சுய சான்று, ஆளுகையில் தகவல் தொழில்நுட்பத் தீர்வுகள், பெருவாரியான மக்களிடையே தரவுகளை எடுத்துச் செல்லுதல் போன்றவை செயல்முறையை முன்னெடுத்து சென்றுள்ளன.

ஆளுகையில் வெளிப்படைத் தன்மை குறித்துப் பேசிய பிரதமர், அரசு மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். குடிமக்களின் முறையான கண்காணிப்பிற்காக, ஆளுகை, கோப்புகளிலிருந்து தகவல் பலகைக்கு (டாஷ்போர்டு)  மாறியிருப்பதாக அவர் தெரிவித்தார். அரசு மின் சந்தை தளம் வாயிலான அரசின் கொள்முதலில், செயல்முறை மேம்பட்டிருப்பதோடு வெளிப்படைத் தன்மையும் ஏற்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஆளுகையில் தொழில்நுட்பத்தின் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். உள்கட்டமைப்புப் பொருட்கள், ஏழைகளின் வீடுகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு  புவிசார் அடையாளத்தை வழங்குவதன் வாயிலாக அவை உரிய நேரத்தில் நிறைவு செய்யப்படும் என்ற உதாரணத்தை அவர் வழங்கினார். கிராமப்புற வீடுகளை வரைபடமிடுதலில் ட்ரோன்களின் பயன்பாடு குறித்தும், வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதற்காக, குறிப்பாக வரி சார்ந்த துறைகளில் மனித தொடர்பை குறைப்பது பற்றியும் அவர் பேசினார். மதிப்பீடு செய்வது மற்றும் வெளியேறும் நடவடிக்கைகளோடு மட்டுமே புதுமை நிறுவனங்களின் நிறுவனர்கள் தங்களின் செயல்களை கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று பிரதமர் கோரிக்கை விடுத்தார்.

“இந்த நூற்றாண்டையும் கடந்து இயங்கும் நிறுவனங்களை எவ்வாறு நீங்கள் உருவாக்கலாம்  என்பது குறித்து சிந்தியுங்கள். சர்வதேசத் தரம் வாய்ந்த பொருட்களை நீங்கள் எவ்வாறு உருவாக்கலாம் என்பதைப் பற்றி சிந்தியுங்கள்”, என்று பிரதமர் கூறினார். இந்தியாவிற்காக தயாரிப்பது என்ற முத்திரையையும் தங்களது தீர்வுகளில் வலியுறுத்துமாறு தொழில்நுட்பத் தலைவர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். உத்வேகம் மற்றும் இந்திய தொழில்நுட்ப தலைமைத்துவத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு,  போட்டியிடும் வகையிலான புதிய வரைகூறுகளை உருவாக்குமாறு அவர்களை பிரதமர் வலியுறுத்தினார். நிறுவன உருவாக்கம் மற்றும் சிறப்பாக செயல்படும் தன்மை ஆகியவற்றை அவர் வலியுறுத்தினார்.
2047-ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள நூறாவது சுதந்திர தினம் வரையில் தலைசிறந்த பொருட்களையும், தலைவர்களையும் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். உங்கள் இலக்குகளை நிர்ணயுங்கள், நாடு உங்களுடன் இருக்கிறது என்று பிரதமர் கூறினார்.

21-ஆம் நூற்றாண்டில் நாடு சந்திக்கும் சவால்களுக்கு ஆக்கபூர்வமான தொழில்நுட்பத் தீர்வுகளை அளிப்பது தொழில்நுட்பத்துறையின் கடமை என்று பிரதமர் தெரிவித்தார்.  வேளாண்துறையில் தண்ணீர் மற்றும் உரத்தேவை, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், தொலை மருத்துவம், கல்வி, திறன் மேம்பாடு போன்ற துறைகளில் தீர்வுகளை உருவாக்கும் வகையில் செயல்படுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். தேசிய கல்விக் கொள்கை, அடல் டிங்கரிங் ஆய்வகங்கள், அடல் இன்கியூபேஷன் மையம் போன்று திறனையும் புதுமைகளையும் ஊக்கப்படுத்தும் முயற்சிகளில் தொழில்துறையின் ஆதரவு தேவை. தங்களது நிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்பு திட்டத்தின் (சிஎஸ்ஆர்) பயன்களில் கவனம் செலுத்துமாறும், பின்தங்கிய பகுதிகள், டிஜிட்டல் கல்வியை நோக்கி தங்களது நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறும் பிரதமர் வலியுறுத்தினார். 2-ஆம் மற்றும் 3-ஆம் தர நகரங்களில் தொழில் முனைவோருக்கும், கண்டுபிடிப்பாளர்களும் உருவாகிவரும் வாய்ப்புகள் பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.

Tags : businesses ,towns ,Companies , பிரதமர் மோடி
× RELATED ஓடை உடைப்புகளை சரி செய்ய கோரிக்கை