காஸ் சிலிண்டர் விலை உயர்வு எதிரொலி : கிராமங்களிலும் அதிகரிக்கும் ‘இண்டக்சன் ஸ்டவ்’ பயன்பாடு

சென்னை:சமையல் காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், திருவள்ளூர் மாவட்ட கிராமப்புற மக்கள் இண்டக்சன் ஸ்டவ் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இது, காஸ் டீலர்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் 2 சமையல் காஸ் சிலிண்டர் வைத்துள்ளவர்களுக்கு ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை. ஒரு சிலிண்டர் வைத்துள்ளவர்களுக்கு 3  லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்தது. சமீபத்தில், தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்து வந்த மண்ணெண்ணெய் அளவை, மத்திய அரசு படிப்படியாக குறைத்தது.

இதனால், ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் அளவும் குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, நகர்ப்புறங்களில் 5 லிட்டர் வாங்கி வந்தவர்களுக்கு 3 லிட்டர்,  கிராமப்புறங்களில் 3 லிட்டர் வாங்கி வந்தவர்களுக்கு, ஒரு லிட்டர் என, அந்தந்த மாவட்டங்களுக்கான ஒதுக்கீடு அடிப்படையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. இது, கிராம மக்களுக்கு  போதுமானதாக இல்லை. இதனால், மண்ணெண்ணெய் பயன்படுத்தி வந்த மக்கள், மாற்று எரிபொருளை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த வகையில், சமையல் காஸ் சிலிண்டர் பயன்பாடு  அதிகரித்தது. பாரத் பெட்ரோலியம், இண்டியன் ஆயில் உட்பட எண்ணெய் நிறுவனங்கள், அதிகளவு, சமையல் காஸ் சிலிண்டர்களை, அந்தந்த மாவட்டங்களில் உள்ள தங்களின் ‘டீலர்களுக்கு’  வினியோகிக்க துவங்கின.

இந்நிலையில், அதன் விலையும் மாதம் தோறும் ஏறுமுகமாகவே உள்ளது. நேற்று முதல் சமையல் சிலிண்டரின் விலை ரூ.780 ஆக உயர்ந்துள்ளது. இதனால், நிறுவனங்கள் எதிர்பார்த்தபடி, காஸ்  சிலிண்டர் விற்பனை அதிகரிக்கவில்லை. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.இதற்கான காரணம் குறித்து ஆராய்ந்தபோது, ‘மாநிலத்தின் பல பகுதிகளிலும், கிராமங்களிலும்  பெரும்பாலானோர் ‘இன்டக்சன்’ ஸ்டவ் பயன்படுத்த துவங்கியுள்ளனர்’ என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக 80 சதவீத வீடுகளில் ‘இன்டக்சன்’ ஸ்டவ் பயன்படுத்தப்படுகின்றன.இதுகுறித்து காஸ் சிலிண்டர்  டீலர் ஒருவர் கூறுகையில், ‘மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைந்த நிலையில், மாற்று எரிபொருள் சமையல் காஸ் சிலிண்டர் தான் என்ற மனநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த எண்ணெய்  நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன. ஆனால், மாதந்தோறும் சிலிண்டர் விலை உயர்ந்து வருகிறது. இதனால், நகர மற்றும் கிராம மக்கள் பலர் இண்டக்சன் ஸ்டவ்களை வீடுகளில் பயன்படுத்த  துவங்கியுள்ளனர்’ என்றார்.

Related Stories: