×

பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி... பாஜக ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்றாமல் படுதோல்வி

சண்டிகர் : புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு இடையே நடைபெற்ற பஞ்சாப் மாநில உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தனித்து போட்டியிட்ட பாஜக, அகாலிதளம்,ஆம் ஆத்மி கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன. பஞ்சாப் மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 14ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொகாலி மாநகராட்சிக்குட்பட்ட ஒரு சில வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறுவதால் மீதமுள்ள 7 மாநகராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, முடிவுகள் வெளியான 7 மாநகராட்சிகளையும் கைப்பற்றி உள்ளது. பத்திண்டா மாநகராட்சி 53 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் வசம் ஆக்கியுள்ளது. தேர்தல் வெற்றியை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அகாலிதளம் விலகியதால் உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டது. தோல்வி பயம் காரணமாக குறைந்த வேட்பாளர்களையே பாஜக களம் இறங்கியதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அக்கட்சி ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்றாமல் படுதோல்வி அடைந்துள்ளது. இதேபோல் அகாலிதளம், ஆம் ஆத்மி கட்சிகளுக்கும் தேர்தல் முடிவுகள் பெறும் பின்னடைவை தந்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான ,விவசாயிகளின் கோபம் பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் எதிரொலித்துள்ளதாக அரசியல் விமர்சனங்கள் கூறுகின்றனர். 


Tags : Congress ,body elections ,Punjab ,BJP ,corporation , படுதோல்வி
× RELATED பஞ்சாப் காங். மாஜி தலைவர் அகாலி தளத்தில் இணைந்தார்