×

முன்னாள் மத்திய அமைச்சர் அக்பர் தொடர்ந்த வழக்கில் இருந்து பத்திரிக்கையாளர் பிரியா ரமணி விடுவிப்பு

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் அக்பர் தொடர்ந்த வழக்கில் இருந்து பத்திரிக்கையாளர் பிரியா ரமணி விடுவிக்கப்பட்டுள்ளார். வழக்கில் பிரியா ரமணிக்கு எதிராக எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்காததால் டெல்லி கீழமை நீதிமன்றம் விடுவித்தது. இரு தரப்பினரும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் எனவும் டெல்லி கோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2014ல் அமைந்தபோது அதில் வெளியுறவுத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் எம்.ஜே. அக்பர். இந்த நிலையில், 2018ஆம் ஆண்டில் உலக அளவில் வைரலான மீ டூ என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்கள் பாலியலுக்கு உள்ளானதாக புகார் பதிவிடும் விவகாரம், இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த இயக்கத்தில் இணைந்த பெண்கள் பலரும் தங்களுடைய வாழ்காலத்தில் நடந்த பாலியல் வல்லுறவு சம்பவங்களை பொது சமூக தளங்களில் பகிரத் தொடங்கினார்கள். பல திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு அனுபவங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தனர். இதன் தொடர்ச்சியாக பிரபல பத்திரிகையாளரான பிரியா ரமணி, எம்.ஜே. அக்பரின் கீழ் பணியாற்றியபோது பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நபரால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தங்களுடைய அனுபவத்தை பகிர்வார்கள் என பிரியா ரமணி கூறியிருந்தார். அது போலவே, டஜன் கணக்கான பெண்கள், தாங்களும் எம்.ஜே. அக்பரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக கூறினார்கள்.

இந்த நிலையில் பிரியா ரமணியின் புகார், மத்திய அமைச்சரவையிலும் சலசலப்பை ஏற்படுத்தியதையடுத்து, தமது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஜே. அக்பர். பிறகு தனக்கு எதிரான பிரியா ரமணியின் குற்றச்சாட்டால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாகக் கூறி டெல்லி நீதிமன்றத்தில் எம்.ஜே. அக்பர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், தன் மீது பிரியா ரமணி சுமத்திய குற்றச்சாட்டுகள் போலியானவை என்று அவர் தொடர்ச்சியாக மறுத்து வந்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கின் இரு தரப்பு வாதங்கள், பிப்ரவரி 1ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் வழக்கில் பிரியா ரமணிக்கு எதிராக எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்காததால் டெல்லி கீழமை நீதிமன்றம் பத்திரிக்கையாளர் பிரியா ரமணியை விடுவித்தது.

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது தன்னம்பிக்கையையும், சுயகவுரவத்தையும் ஒருவரிடம் பறிப்பதாகிவிடும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் பெண்கள் புகாரளிக்க புதிய வழிவகை தேவை என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சமூக அந்தஸ்து உள்ளிட்ட காரணங்களால் பல பெண்கள் புகார் தர முன் வருவதில்லை என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பெண்கள் குரல் கொடுப்பதற்காக அவர்கள் தண்டிக்கப்படக்கூடாது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

Tags : Priya Ramani ,Akbar , Priya Ramani
× RELATED முகலாய பேரரசர் அக்பர் கொடுங்கோலன்,...