×

பெரியகுளம் பகுதியில் முதல்போக நெல் அறுவடை தீவிரம்

*அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறப்பு நெல்லுக்கு விலையை உயர்த்த கோரிக்கை

பெரியகுளம் : பெரியகுளம் பகுதியில் முதல்போக நெல் அறுவடை தீவிரமாகியுள்ள நிலையில், தற்காலிக கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. தொடர்மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம், தாமரைக்குளம், பொம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட முதல்போக நெல் சாகுபடி அறுவடை பணிகளில், விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால், மேல்மங்கலம் பகுதியில் தமிழக அரசின் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து, விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர். இந்தாண்டு ஜன.15 வரை தொடர்மழையால், நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஏக்கருக்கு 30 முதல் 35 மூட்டைகள் அறுவடை செய்து வந்த நிலையில், தற்போது மழை பாதிப்பால் 18 முதல் 20 மூட்டைகள் வரை அறுவடை செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், வருடந்தோறும் மத்திய அரசின் சார்பில் ஒரு கிலோ நெல்லுக்கு 50 பைசா விலை உயர்த்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு ஒரு கிலோ நெல்லுக்கு 40 பைசா மட்டுமே விலை உயர்த்தியுள்ளனர்.

மேலும், கடந்த 2017 முதல் தமிழக அரசு நெல்லிற்கு விலை உயர்த்தி தரவில்லை. தமிழக அரசு ஆண்டுதோறும் முறையாக விலை உயர்த்தியிருந்தால், ஒரு கிலோ நெல்லின் விலை ரூ.21.50 கிடைத்திருக்கும். ஆனால், தற்போது 19 ரூபாய் 58 பைசாவிற்கு ஒரு கிலோ நெல்லை கொள்முதல் செய்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு மேலும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக நெல் விலை ஏற்றம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, தமிழக அரசு வழங்கும் விலை ஏற்றத்தை அறிவித்து, நெல் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பை ஈடுசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Periyakulam , Periyakulam: As the first paddy harvest intensifies in the Periyakulam area, a temporary procurement center has been opened.
× RELATED கோடை வெப்பத்தை தணிக்க கும்பக்கரையில் குவியும் பயணிகள்