×

ஊட்டி நகரில் குதிரைகளுக்கு மைக்ரோ சிப்பிங் பொருத்தும் பணி

ஊட்டி :  ஊட்டி நகரில் குதிரைகள் சுற்றித்திரிவதை தடுக்கும் பொருட்டு அவற்றின் உடலில் மைக்ரோ சிப்பிங் பொருத்தும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளது.   நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதேபோல், நீலகிரி மாவட்ட கிராமப்புறங்களில் இருந்தும் அதிகளவு மக்கள் பல்வேறு காரணங்களுக்காக ஊட்டி நகருக்கு வந்து செல்கின்றனர்.

ஊட்டி நகரின் முக்கிய சாலைகளில் குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் உலா வருவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஊட்டியில் பந்தய குதிரைகள் வைத்து சவாரி தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடைேய ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் மற்றும் சுற்றுலா பயணிகள் சவாரி மேற்கொள்ள பயன்படுத்தப்படும் அனைத்து குதிரைகளையும் அதன் உரிமையாளர்கள் பதிவு செய்து அவற்றின் உடலில் மைக்ரோ சிப்பிங் செய்து குதிரைகளுக்கு தகுதி சான்று பெறப்பட வேண்டும். தகுதி சான்று பெறாத குதிரைகள் சுற்றி திரியவோ, சுற்றுலா பயணிகளை வைத்து குதிரை சவாரி செய்ய கூடாது.

சவாரிக்கு உபயோகப்படுத்தும் குதிரைகளுக்கு மைக்ரோ சிப்பிங் செய்யப்பட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி துறையின் மூலமாக உரிமம் பெற்றிருக்க வேண்டும். சுற்றுலா வளர்ச்சித்துறை மூலம் வழங்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே சவாரிகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதன் அடிப்படையில் குதிரைகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் பணிகள் ேநற்று மேற்கொள்ளப்பட்டது.
கால்நடைத்துறையுடன் இணைந்து தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இப்பணியை மேற்கொண்டனர். ஏராளமான குதிரைகளுக்கு நேற்று சிப் பொருத்தப்பட்டது.

   இது குறித்து கால்நடைத்துறையினர் கூறுகையில், மைக்ரோ சிப்பில் குதிரையின் உரிமையாளர்கள் குறித்த அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவற்றை ஸ்கேன் செய்யும் போது உரிமையாளர்கள் யார் என்று சுலபமாக கண்டறிந்து கொள்ள முடியும்.

அந்த குதிரைகள் பொது இடங்களில் சுற்றி திரிந்தால் அதன் உரிமையாளர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படும்.


சாலைகளில் சுற்றி திரியும் குதிரைகளுக்கு முதல் முறை ரூ.1000, இரண்டாம் முறை ரூ.2000 அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை நீலகிரி மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் மூலம் குதிரைகள் பறிமுதல் செய்யப்படும்.


பதிவு செய்யப்படாத குதிரைகளை கொண்டு சவாரி செய்தலுக்கு அபராதமும், பறிமுதலும் செய்யப்படும். குதிரையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.

Tags : Ooty , Ooty: In order to prevent horses from roaming in Ooty, micro chipping has been started on their bodies.
× RELATED புலி நடமாட்ட தகவலால் தடை...