×

ரஷ்யா நாட்டில் இருந்து கோடியக்கரை சரணாலயத்தில் குவிந்த பறவைகள்

வேதாரண்யம் : ரஷ்யா நாட்டில் இருந்து வேதாரண்யம் கோடியக்கரை சரணாலயத்திற்கு லட்சக்கணக்கான லிட்டில்சென்ட் பறவைகள் குவிந்துள்ளன.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரை போக்க இங்கு வருவது வழக்கம். ரஷ்யா, சைபீரியா, இலங்கை பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை இங்கு வந்து செல்வது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டு கோடியக்கரையில் பருவமழை அதிக அளவு பெய்து மழைநீர் அதிகமாக தேங்கி உள்ளது. ரஷ்யாவில் இருந்து வந்துள்ள பூநாரை 47வகையான சிறை வகைகள், கூழைக்கடா. மண்டை உள்ளான், கொசு உள்ளான், நிலக்கல் உள்ளான் வந்து குவிந்துள்ளது. இந்த பறவைகள் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் உள்ள நண்டு பள்ளம், சிறுதலைக்காடு, நெடுந்தீவு, கோவை தீவு போன்ற பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன.

இந்த ஆண்டு பருவ மழை அதிகமாக பெய்ததால் ரஷ்ய நாட்டில் இருந்து சிறிய வகை பறவையான லிட்டில்சென்ட் (கொசுஉள்ளான்)என்ற பறவை லட்சக்கணக்கில் வழக்கத்தைவிட அதிகமாக கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வந்து குவிந்துள்ளது. இந்த பறவைகளின் எடை 15 கிராம் முதல் 25 கிராம் எடை உடையதாகவும், மிகச்சிறிய பறவையாகவும் காணப்படுகிறது. இந்த பறவை ரஷ்ய நாட்டில் இருந்து கோடியக்கரைக்கு இடைவிடாது பறந்து வந்துள்ளது.

இந்த சிறிய பறவை கூட்டம் கூட்டமாக லட்சக்கணக்கில் தண்ணீரில் புழு, பூச்சிகளை உண்பதை பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது. லிட்டில்சென்ட் பறவைகள் லட்சக்கணக்கில் வந்து குவிந்துள்ளதால் சுற்றுலா பயணிகளும், பறவை ஆர்வலர்களும் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2 நாள் பறவைகள் கணக்கெடுப்பு பணி

கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் கூறுகையில், இந்த ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று (17ம்தேதி), நாளை (18ம்தேதி) நடை பெற உள்ளன. இந்த கணக்கெடுப்பு பணியில் கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

நாடு திரும்ப தயாராகும் பறவைகள்

இதுகுறித்து பறவை ஆராய்ச்சியாளர் பாலச்சந்திரன் கூறுகையில்,சீசன் முடியும் நேரம் வந்துவிட்டதால் லிட்டில்சென்ட் சிறிய வகை பறவைகள், தண்ணீர் தேங்கிய பகுதிகளில் அதிக அளவில் காணப்படும் லார்வா புழு பூச்சிகளை தின்று உள்ளதால் தங்களது உடலில் கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. இதனால் தங்களது சொந்த நாடான ரஷ்யாவுக்கு திரும்புவதற்கு தங்களை தயார் படுத்தி வருகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த பறவைகள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி விடும் என்றார்.

Tags : Kodiak Sanctuary ,Russia , Vedaranyam: Millions of Littlecent birds have flocked to the Vedaranyam Kodiakkarai Sanctuary from Russia.
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...