×

திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளையால் மக்கள் பீதி-காவல்துறை அலட்சியம் காட்டுவதாக புகார்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் குற்றங்களை தடுக்காமல் காவல்துறை அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களை பாதுகாக்க மாவட்டத்தில் எஸ்பி விஜயகுமார் தலைமையில் மொத்தம் 1,200 போலீசார் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தாண்டு மாவட்டத்தில் அதிகளவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக கொலைகள் அதிகரித்து திருப்பத்தூர் மாவட்டம் கொலை நகரமாக மாறி வருகிறது. மேலும் கஞ்சா விற்பனை, காட்டன் சூதாட்டம், மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சார தொழில் ஆகியன திருப்பத்தூரில் அதிகளவில் நடப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் சிவக்குமார் என்பவரை கொலை செய்த கூலிப்படை நாட்றம்பள்ளி பகுதியில் வீசியது.இதேபோல் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் அடுத்த சோமலபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் கத்தியை காட்டி மிரட்டி பணம் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்தது. பொங்கல் தினத்தன்று துணி எடுக்க சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 7 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

கடந்த வாரம் வடுகமுத்தம்பட்டி கிராமத்தில் அமாவாசை பூஜை செய்த மாந்திரீக சாமியார் சீனிவாசன் என்பவரை மர்ம நபர்கள் கொலை செய்தனர். அந்த கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இந்த சூழலில் நேற்று முன்தினம் திருப்பத்தூர் பகுதியில் மக்கள் நடமாட்டம் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில் தெரு பகுதியில் பெண்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கும்போது தெரு விளக்கை அணைத்து ஓட ஓட அமமுக மாவட்ட மாணவரணி செயலாளரை மர்ம கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். நேற்று முன்தினம் இரவே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தனது மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதுதவிர பல்வேறு பகுதிகளில் அதிகளவில் திருட்டு சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

இதுபோன்ற குற்றங்களை தடுக்க வேண்டிய போலீசார் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் மத்தியில் புகார்கள் எழுந்துள்ளது. மேலும் காவல் நிலையத்தில் தகராறு, கள்ளக்காதல், சொத்து பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகள் சம்பந்தமாக புகார் கொடுத்தால், அந்த புகாரின் மீது சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பிவிடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர்.

இதேபோன்றுதான் அமமுக மாவட்ட மாணவரணி செயலளாருக்கு அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சங்கர் குடும்பத்தினருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டவுன் போலீசில் புகார் அளித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையில் அமமுக மாணவரணி அமைப்பாளர் வானவராயன் நேற்று முன்தினம் கூலிப்படையால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் பக்கத்து வீட்டுக்காரரின் வீடு சூறையாடப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் பதுங்கியிருந்த 4 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் கொலைக்கான முழுமையான காரணம் இதுவரை தெரியவில்லை.

திருப்பத்தூர் மாவட்டத்தில் அமமுக பிரமுகர் கொலை, ஆசிரியர் கொலையில் கூலிப்படை நடமாட்டம் அதிகரித்திருப்பது வெளிப்படையாகி, பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த 10ம் தேதி திருப்பத்தூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பத்தூர் மாவட்டம் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் எந்த குற்ற செயல்களும் நடைபெறவில்லை என்று கூறினார்.

ஆனால், திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகளவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அமைதி பூங்கா என்று முதல்வர் கூறுகிறார். ஆனால், இரவு நேரங்களில் பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாத சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதாக திருப்பத்தூர் மாவட்ட மக்கள் வேதனை தெரிவித்தனர்.

எனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொலை, கொள்ளை வழக்கில் உள்ளவர்களை ரவுடி பட்டியலில் உள்ளவர்களில் விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதை போலீசார் தடுத்து நிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நகரில் சிசிடிவி கேமரா இல்லை

திருப்பத்தூர் பகுதியில் நாள்தோறும் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் இதனை கண்காணிக்க வேண்டிய போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதியதாக பொறுப்பேற்ற எஸ்பி விஜயகுமார் திருப்பத்தூர் பகுதியில் அனைத்து பகுதிகளிலும் ₹18 லட்சம் மதிப்பில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றார். ஆனால் ஒராண்டாகியும் சிசிடிவி கேமரா பொருத்தும் ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அமமுக பிரமுகர் கொலையில், அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லாததால் கொலையாளிகளை கண்டுபிடிக்க போலீசார் திணறி வருகின்றனர். எனவே, சிசிடிவி கேமராக்களை விரைந்து பொருத்த மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : murders ,district ,Tirupati , Tirupati: The public is alarmed by the rising number of murders and robberies in Tirupati district.
× RELATED ஸ்ரீகாளஹஸ்தியில் பேருந்து யாத்திரை சென்ற முதல்வர் ஜெகன்மோகன்