×

பாலாற்றில் ரசாயன கழிவுநீர் கலப்பு, சாலைகளில் டயர்கள் எரிப்பு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் இல்லாத மாவட்டம்-சுற்றுச்சூழல் பாதிப்பால் பொதுமக்கள் கடும் பாதிப்பு

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை உட்பட சாலைகளில் எரிக்கப்படும் கழிவுகளாலும், பாலாற்றுப்படுகையில் கலக்கும் ரசாயன கழிவுகளாலும் சுற்றுச்சூழல் மாசுடன், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வேலூர் மாநகராட்சி எல்லைக்குள் 8 கி.மீ தூரம் வரை நீண்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையை ஒட்டி வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், மோட்டார் வாகன பணிமனைகள், பெட்ரோல் பங்குகள், தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

இதில் சத்துவாச்சாரி தொடங்கி கொணவட்டம் வரை உள்ள சர்வீஸ் சாலையின் இருபுறமும் இயங்கி வரும் மோட்டார் வாகன பணிமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் ஆயில் கழிவுகள், இரும்பு கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், ரெக்ஸின் கழிவுகள், கழிக்கப்படும் டயர்கள், ரப்பர் டியூப்கள், தெர்மாகோல் என அனைத்தும் ஆங்காங்கே தினமும் அதிகாலையில் கொட்டி எரிக்கப்படுகிறது.

இவ்வாறு எரிக்கப்படும் கழிவுகளில் இருந்து வெளியேறும் தூசு மற்றும் புகையால் இப்பகுதிகளை கடந்து செல்லும் பஸ், சரக்கு லாரி உட்பட வாகன ஓட்டிகள், பயணிகள் உட்பட அனைவரும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அந்த பகுதி மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையை மறைத்து செல்லும் புகை மண்டலத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், சுவாச பிரச்னை உள்ள வாகன ஓட்டிகளுக்கு உடல்நல கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சாலையோரங்கள் மட்டுமின்றி வறண்ட ஏரிகள், குளங்கள், பாலாற்றுப்படுகைகயிலும் கட்டிட கழிவுகள், ரசாயன கழிவுகள், இறைச்சிக்கழிவுகள், மருத்துவக்கழிவுகள், உள்ளாட்சி அமைப்புகளின் கழிவுநீர் என விடப்பட்டு பாலாற்றுப்படுகையே நாசமாகி போயுள்ளது.
குறிப்பாக, நேஷனல் சந்திப்பில் இருந்து வேலூர் நகரின் கழிவு நீரை சுமந்து செல்லும் நிக்கல்சன் கால்வாயில் பிரபல மருத்துவமனையின் மருத்துவக்கழிவுகள், ரசாயனம் மற்றும் மனித திசுக்கள் சத்தமின்றி கலக்கப்படுகிறது. இது தேசிய நெடுஞ்சாலையை கடந்து சத்துவாச்சாரி பாலாற்றின் ஓரம் விடப்படும்போது சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, ரங்காபுரம், புது வசூர், வெங்கடாபுரம், அலமேலுமங்காபுரம் பகுதி மக்கள் கண் எரிச்சல், உடல் எரிச்சல், விஷநெடி ஆகியவற்றுடன் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் ஆளாகின்றனர்.

இதுபோன்று தனிமனித மற்றும் நிறுவனங்களின் செயல்களால் மாசுபடும் சுற்றுச்சூழலை கட்டுப்படுத்த வேண்டிய மாசுக்கட்டுப்பாடு வாரியம் என ஒன்று வேலூர் மாவட்டத்தில் செயல்படுகிறதா? என்பதே பெரிய கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. அதற்கேற்ப மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஊழல் வாரியமாகவே மாறியுள்ளது அதன் சமீபகால செயல்பாடுகள் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, பண்டிகைகளுக்கு அறிவிப்பு வெளியிட்டு பெயரளவுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இவ்விஷயத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதுடன், மாநகராட்சியும் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பால் என்ன பாதிப்பு?

பிளாஸ்டிக் கழிவுகள், தெர்மோகோல் போன்ற கழிவுகள் எரிப்பால் நைட்ரஜன் சயனைடு, வினைல் குளோரைடு, தையாக்சின் போன்ற நச்சு வாயு வெளியேறுகிறது. இதனை சுவாசிக்கும்போது நுரையீரல் கேன்சர், சுவாச கோளாறு, ஆஸ்துமா, கண், மூக்கு எரிச்சல் உட்பட பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். நச்சுப்புகையாலும், கரிய புகையாலும் வெளியேறும் தூசு நகரையே தூசு நகரம் மட்டுமின்றி கருப்பு நகரமாக மாறும்.
வாத்துக்குஞ்சுகள் பலிக்கு என்ன காரணம்?

வேலூர் அடுத்த பெருமுகை பாலாற்றில் தேங்கிய தண்ணீரில் இறங்கிய 6 ஆயிரம் வாத்துக்குஞ்சுகள் மரணத்தை தழுவிய நிலையில் பிரேத பரிசோதனை, தேங்கிய தண்ணீர் மாதிரி ஆய்வு, வாத்துக்குஞ்சுகளுக்கு அளிக்கப்பட்ட நெல் உட்பட தானியங்களின் மாதிரிகள் ஆய்வு என நடந்து வருவதாகவும், அம்முடிவுகள் வந்த பின்னரே வாத்துக்குஞ்சுகள் செத்து மடிந்ததற்கான காரணம் தெரிய வரும் என்று கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பாலாற்று தண்ணீர் விஷமானதே வாத்துக்குஞ்சுகள் பலிக்கு காரணம் என்று குற்றம்சாட்டுகின்றனர் மக்கள்.

Tags : lake ,public ,roads ,pollution control board officials , Vellore: Chemicals in roadside waste, including national highways, in the Vellore district
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு