×

அமைச்சர் வாக்குறுதி அளித்து 3 ஆண்டுகளாகியும் நடவடிக்கை இல்லை வேலூர் மாவட்டத்தில் மாம்பழம் ஜூஸ்

*தொழிற்சாலை கேள்விக்குறி-ஆந்திராவை எதிர்நோக்கி காத்திருக்கும் தமிழக ‘மா’ விவசாயிகள்

*குரலற்றவர்களின் குரல்

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு, குடியாத்தம், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், தாலுகாக்கள் மாங்காய் விளைச்சலுக்கு பெயர்பெற்றவை. இதில் குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், காட்பாடி தாலுகாக்களில் விளைவிக்கப்படும் மாங்காய்களில் 90 சதவீதம் வேலூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள ஆந்திரா மாநிலம் சித்தூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சித்தூர் மாவட்டத்தில் மட்டும் மாம்பழக்கூழ் தயாரிக்கும் 350க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தொழிற்சாலைகள் உள்ளன.

இந்த தொழிற்சாலைகளுக்கான மாங்காய்கள் சித்தூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்தும், வேலூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்தும் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதன் மூலம் வேலூர் மாவட்ட விவசாயிகள் லாபம் பெற்று வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக சித்தூர் மாவட்ட மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளுக்கு வேலூர் மாவட்ட விவசாயிகள் மாங்காய்களை அனுப்பி வைத்தனர். அதிக சுவையுடன் கூடிய கூழ் கிடைப்பதால் சித்தூர் மாம்பழ கூழ் தொழிற்சாலைகள் தமிழக மாங்காய்களையே அதிகளவில் கொள்முதல் செய்தனர்.

இதனால் நஷ்டத்தை சந்தித்த ஆந்திர மாங்காய் விவசாயிகள், தமிழக மாங்காய்களின் வரத்தால் தங்களது மாங்காய்களுக்கு விலை குறைவதாகவும், வேண்டுமென்றே மாம்பழக்கூழ் தொழிற்சாலைகள் தங்கள் மாங்காய்களை தவிர்ப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

இதனால் தமிழக மாங்காய்களுக்கு ஆந்திராவில் கடந்த 2018ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு மீண்டும் தமிழக மாங்காய்கள் ஆந்திராவில் விற்பனைக்கு அனுமதித்தனர். ஆனால் சொற்ப விலைக்கு தான் விற்பனை செய்ய முடிகிறது. ஆந்திரா மாநில மாங்காய் என்றால் அதற்கு தனி விலை, தமிழக மாங்காய் என்றால் அதற்கு தனி விலை நிர்ணயம் செய்தது ஜூஸ் தொழிற்சாலைகள்.

ஆண்டுக்கு சராசரியாக வேலூர் மாவட்டத்தில் மட்டும் 3 லட்சம்டன் மாங்காய் விளைகிறது. இங்கிருந்து கிருஷ்ணகிரி மாவட்ட மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளுக்கு குறைந்த அளவு மட்டுமே கொண்டு செல்கின்றனர்.வேலூர் மாவட்டத்துக்குள் அரசு மற்றும் தனியார் மாம்பழக்கூழ் தொழிற்சாலைகள் இல்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆந்திராவிடம் கையேந்தும் நிலைக்கு தமிழக விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 2018ம் ஆண்டு, அமைச்சர் கே.சி.வீரமணி வேலூர் மாவட்டத்தில் மாம்பழம் ஜூஸ் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆந்திராவில் உள்ளது போல தமிழகத்தில் மாங்காய்க்கு மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் அவர் தெரிவித்த கருத்து வெறும் வார்த்தைகளில் மட்டுமே உள்ளது. இதனால் இந்தாண்டும் ஆந்திராவிடம் கையேந்தும் நிலையில் தமிழக மாங்காய் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

விவசாயிகளின் நலன் காக்கும் அரசு என்று தமிழக அரசு சொல்லிக் கொண்டு வருகிறது. அதற்கேற்ப ஆந்திராவை போல் வேலூர் மாவட்டத்திலும் கூடுதல் மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளை ஏற்படுத்துவதுடன் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். இதற்காக எம்பி, எம்எல்ஏக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மத்தியில்  கோரிக்கை வலுத்துள்ளது.

ஆந்திராவில் மானியம்

ஆந்திராவில் டன்னுக்கு 2,500 விவசாயிகளுக்கு நஷ்ட ஈடாக வழங்க கடந்த 2018ம் ஆண்டு ஆந்திர அரசு உத்தரவிட்டது. மேலும் தொழிற்சாலைக்கு வரும் மாங்காய்களை டன் 5,000 க்கும் குறைவாக பெறக்கூடாது என்றும் உத்தரவிட்டது. இதன் மூலம் ஆந்திரா தனது மாநில விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றியுள்ளது. அதேவேளையில் தமிழக விவசாயிகளும் பாதிக்கப்படக்கூடாது என்று தமிழக மாங்காய்களை தொடர்ந்து கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கியது.

இருப்பினும் ஆந்திரா விவசாயிகளுக்கு டன்னுக்கு ₹10ஆயிரம் முதல் ₹20 ஆயிரம் வரை கிடைக்கிறது. ஆனால் தமிழக விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ₹10 ஆயிரம் தான் கிடைக்கிறது. மா தோப்புகளுக்கு மருந்து அடிப்பது, கூலி ஆட்கள், வாடகைக்கு தண்ணீர் பாய்ச்சுவது என்று அனைத்தும் ஆயிரக்கணக்கில் சென்றுவிடுகிறது. இதனால் தமிழக மாங்காய் விவசாயிகள் கடும் நஷ்டத்தில் மூழ்கியுள்ளனர்.

Tags : Vellore District ,Minister Mango Juice , Vellore: Peranampattu, Gudiyatham, Katpadi, Dam, KV Kuppam, talukas in Vellore district for mango production.
× RELATED வெயிலின் தாக்கத்தை குறைக்க வீதிகளில்...