×

நாடு முழுவதும் 4.78 லட்சம் கைதிகள் சிறையில் அடைப்பு : மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி : நாடு முழுவதும் 4.78 லட்சம் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விபரத்தில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சிறைச்சாலைகள் தொடர்பான தரவுகளை மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி கடந்த வாரம் தாக்கல் செய்தார். அதன்படி தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரங்களின்படி (2019 டிசம்பர் 19), நாடு முழுவதும் உள்ள சிறைகளில் 4,78,600 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3,21,155 பேர் (67.10 சதவீதம்) இந்துக்கள், 85,307 பேர் (17.82 சதவீதம்) முஸ்லிம்கள், 18,001 பேர் (3.76 சதவீதம்) சீக்கியர்கள், 13,782 பேர் (2.87 சதவீதம்) கிறிஸ்தவர்கள், 3,557 பேர் (0.74 சதவீதம்) மற்றவர்கள் உள்ளனர். இவர்களில் பாலின அடிப்படையில் பெண் கைதிகளில், 13,416 இந்துக்கள், 3,162 முஸ்லிம்கள், 721 சீக்கியர்கள், 784 கிறிஸ்தவர்கள், 261 மற்ற மதங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைப் பொருத்தவரை உத்தரபிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான 72,512 இந்துக்கள், 27,459 முஸ்லிம் கைதிகள் சிறைகளில் உள்ளனர். பஞ்சாபில் அதிகபட்சமாக 12,778 சீக்கியர்கள், 1,640 கிறிஸ்தவர்கள், 915 மற்றவர்கள் சிறையில் உள்ளனர். மொத்த கைதிகளில் 3,15,409 (65.90 சதவீதம்) பேர் பட்டியல் சாதியினர் (எஸ்சி), 1,26,393 பேர் பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) கைதிகள் ஆவர். அதிகபட்சமாக 1,62,800 (34.01 சதவீதம்) கைதிகள் ஓபிசி பிரிவையும், 99,273 பேர் (20.74 சதவீதம்) எஸ்சி வகுப்பையும், 53,336 பேர் (11.14 சதவீதம்) எஸ்டி வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். இதேபோல் மொத்த கைதிகளில் 1,32,729 பேர் (27.37 சதவீதம்) கல்வியறிவற்றவர்கள், 5,677 பேர் தொழில்நுட்ப பட்டம் அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றவர்கள். மேலும், 1,98,872 பேர் (41.55 சதவீதம்) கைதிகள் 10ம் வகுப்புக்கு கீழ் படித்தவர்கள். 1,03,036 பேர் (21.52 சதவீதம்) பத்தாம் வகுப்புக்கு மேல் படித்தவர்கள், 30,201 பேர் (6.31 சதவீதம்) இளங்கலை பட்டம் பெற்றவர்கள், 8,085 (1.68 சதவீதம்) பேர் முதுகலை  பட்டம் பெற்றவர்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : inmates ,country ,Union Home Ministry , உள்துறை அமைச்சகம்
× RELATED சிறையில் இட்லி சாப்பிட்ட 13 கைதிகளுக்கு வயிற்று வலி