பிளஸ் 2 தேர்வு அட்டவணையில் எந்த குழப்பமும் இல்லை : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு : பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதில் எந்த குழப்பமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம், கோபியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உள் விளையாட்டு அரங்கை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது,பிளஸ்2 பொதுத்தேர்வு அட்டவணை தயார் நிலையில் வைத்து இருந்தோம். தேர்வு நடத்துவது குறித்து துறை சார்பாக நேற்று முதலமைச்சரிடம் ஆலோசனை செய்தோம். சி.பி.எஸ்.இ பள்ளிகள் தேர்வு அட்டவணை வெளியிட்ட பிறகு தமிழக பள்ளி கல்வித்துறை தேர்வு நடத்துவதில் தாமதப்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்து அறிவித்துள்ளோம்.

முதலில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கட்டும் என்று காலதாமதம் செய்து வந்தோம். பொதுத்தேர்வு அட்டவணை சரியாக போட்டு வைத்து இருந்ததால் வெளியிட்டோம். இதில் குழப்பம் தேவை இல்லை. தேசிய திறனாய்வு தேர்வு கட்டணத்தை அரசு செலுத்துவது குறித்து 23ம் தேதி முதலமைச்சருடன் கலந்து முடிவு எடுக்கப்படும். நூலகங்களில் உள்ள காலி பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்படும்.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Related Stories:

>