×

புதிய வகை கொரோனாவுக்கு எதிராக குறைந்த அளவே செயல்பாடு!: கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்ப பெற சீரம் நிறுவனத்துக்கு தென்னாப்ரிக்கா கோரிக்கை..!!

பிரிட்டோரியா: பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட், ஆஸ்ராஜெனகாவின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து திட்டத்தை கைவிட்டுள்ள தென்னாப்ரிக்க தடுப்பூசிகளை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு இந்தியாவின் சீரம் நிறுவனத்தை கேட்டுக் கொண்டுள்ளது. தென்னாப்ரிக்காவின் கொரோனா வைரஸுடன் மரபணு மாற்றம் அடைந்துள்ள மற்றொரு வகை கொரோனா வைரஸும் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த திட்டமிட்ட அந்நாட்டு அரசு, இம்மாத தொடக்கத்தில் இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து 10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை வாங்கி மக்களுக்கு செலுத்தும் முன்பாக கோவிஷீல்டு தடுப்பூசியை அந்நாட்டின் விஞ்ஞானிகள் ஆய்வு சோதனைக்கு உட்படுத்தினர்.

இதையடுத்து தங்கள் நாட்டில் பரவி வரும் மரபணு மாற்றம் அடைந்த புதியவகை கொரோனாவுக்கு எதிராக சீரம் தடுப்பூசிகள் குறைந்த அளவே பாதுகாப்பு வழங்குவதாக கடந்த வாரம் கூறிய தென்னாப்ரிக்கா, தடுப்பூசி செலுத்தும் பணிகளை நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியை கைவிடுவதாக கூறிய தென்னாப்ரிக்க அரசு, தாங்கள் வாங்கிய தடுப்பூசியை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு சீரம் நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக இந்தியாவின் சீரம் நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

இந்தியா உள்ளிட்ட அனைத்து வளரும் நாடுகளுக்கும் தேவையான ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்து விநியோகிக்கும் பொறுப்பு சீரம் நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. சீரம் தடுப்பூசியை பல்வேறு நாடுகளுக்கும் இலவசமாகவும் வணிக முறையிலும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி கடந்த வாரம் சீரம் நிறுவனத்தின் 10 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தென்னாப்ரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் செயல்பாடு குறைவாக இருப்பதன் காரணமாக சீரம் தடுப்பூசியை திருப்பி அளிக்க தென்னாப்ரிக்கா முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Covshield Vaccine, Serum Company, South Africa
× RELATED வெளிநாட்டு முகவர் மசோதாவை சட்டமாக்க...