ரோகிணி ஆணையம் பரிந்துரை செய்ய முடிவு: 27% ஒபிசி இடஒதுக்கீட்டை 4ஆக பிரித்து உள்ஒதுக்கீடு

புதுடெல்லி: ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீட்டை 2, 6, 9 மற்றும் 10 என 4 வகையான உள்ஒதுக்கீடாக பிரிக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட ரோகிணி ஆணையம் பரிந்துரை செய்ய திட்டமிட்டுள்ளது. ‘இந்தியாவில் கல்வி, வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் இடஒதுக்கீடு, உண்மையிலேயே தேவைப்படும் பிரிவினருக்கு கிடைக்கவில்லை. அதனால், இந்த இடஒதுக்கீடு பெறும் சமூகங்களின் பட்டியலை மாற்றியமைக்க வேண்டும்,’ என்று உச்ச நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது. மத்திய அரசின் இடஒதுக்கீடு தொகுப்பில் மொத்தம் 2,633 ஓபிசி பிரிவுகள் உள்ளன. இவர்களுக்கு மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்பில் 27 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதியான ரோகிணி தலைமையில் கடந்த 2017ம் ஆண்டு தனி ஆணையம் நியமிக்கப்பட்டது. ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீட்டில் 4 வகையான உள்ஒதுக்கீடு முறைகளை பின்பற்றலாம் என ரோகிணி ஆணையம் விரைவில் பரிந்துரை செய்ய உள்ளது.

குறிப்பாக ஓபிசி பிரிவை நான்கு பிரிவுகளாக பிரித்து, அதற்கு 2, 6, 9. மற்றும் 10 ஆகிய சதவிகிதங்களாக உள்ஒதுக்கீடு வழங்க ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதாவது, எண்ணிக்கையில் அதிகமாக இருந்தும் சரிவர பலன் அடையாமல் இருக்கும் 1,674 பிரிவுகளை முதல் உட்பிரிவிலும், 534 பிரிவுகளை 2வது உட்பிரிவிலும், 328 பிரிவுகளை 3வதாகவும், அதேப்போன்று இறுதியாக 97 பிரிவுகளை 4வது உட்பிரிவுகளாக வகைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து மாநில அரசுகளுடன் அடுத்த மாதம் ஆலோசனை நடத்திய பின்னர், மத்திய அரசிடம் பரிந்துரைக்கப்படும்.

Related Stories:

More