×

குடியரசு தினத்திற்கு முன்பாக ‘டூல்கிட்’ தயாரிக்க ஜூம் மீட்டிங்கில் பங்கேற்றவர்கள் யார், யார்..?: 70 பேர் குறித்த விபரங்களை சேகரிக்கும் டெல்லி போலீசார்

புதுடெல்லி: குடியரசு தினத்திற்கு முன்பாக விவசாயிகள் போராட்டம் தொடர்பான ‘டூல்கிட்’ தயாரிப்பதற்கு வீடியோ கான்பரன்சிங் மீட்டிங்கில் யார், யார் பங்கேற்றனர் என்பது குறித்த தகவல்களை கேட்டு டெல்லி போலீசார் ஜூம் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளனர். டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க், டிவிட்டரில் ‘டூல்கிட்’ ஒன்றை பகிர்ந்தார். அதில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவான பதிவுகள் மூலம் டிவிட்டரில் பெரும் புயலை கிளப்புவது, போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது என போராட்டத்தில் பங்கேற்பவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த டூல்கிட் மூலம், இந்தியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்த முயலும் காலிஸ்தானின் பிரிவினைவாதிகளின் சதித்திட்டத்திற்கு துணை போயிருப்பதாக கிரெட்டா மீது டெல்லி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். மேலும், டூல்கிட்டை உருவாக்கியது தொடர்பாக கிரெட்டாவின் சுற்றுச்சூழல் அமைப்பின் இந்திய துணை நிறுவனரான பெங்களூருவைச் சேர்ந்த 22 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியை கடந்த 2 தினங்களுக்கு முன் டெல்லி போலீசார் கைது செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை டெல்லி போலீசார் வெளியிட்டனர். திஷா ரவி மற்றும் சாந்தனு ஆகிய 2 பேர் டூல்கிட்டை உருவாக்கியதாகவும், மும்பையை சேர்ந்த வக்கீல் நிகிதா ஜேக்கப் எடிட்டிங் செய்ததாகவும் கூறி உள்ளனர். மேலும், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான பிஎப்ஜே நடத்திய ஜூம் மீட்டிங்கில் சாந்தனு, நிகிதா ஆகியோர் பங்கேற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள நிகிதா, சாந்தனு மீது பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விவசாயிகள் டிராக்டர் பேரணி நடந்த குடியரசு தினத்திற்கு முன்பாக பிஎப்ஜே அமைப்பு நடத்திய வீடியோ கான்பரன்ஸ் மீட்டிங்கில் பங்கேற்றவர்கள் விவரம் குறித்து தகவல் தருமாறு டெல்லி போலீசார் ஜூம் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இது குறித்து டெல்லி போலீஸ் இணை கமிஷனர் (சைபர் பிரிவு) பிரேம்நாத் கூறுகையில், ‘‘கடந்த ஜனவரி 11ம் தேதி ஜூம் மீட்டிங் நடந்துள்ளது.

அதில் மும்ைபயை சேர்ந்த நிகிதா ஜேக்கப், புனே பொறியாளர் சாந்தனு உட்பட 70 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் அனைவர் விவரம் தருமாறு கேட்கப்பட்டுள்ளது. பிஎப்ஜே அமைப்பின் நிறுவனர் மோ தாலிவாலை கனடாவைச் சேர்ந்த புனித் என்பவர் மூலமாக நிகிதா, சாந்தனுவை தொடர்பு கொண்டுள்ளனர். இவர்கள் கனடா எம்பிக்கள் சிலரிடமும் பேசி உள்ளனர். ஜூம் மீட்டிங்கில் பங்கேற்ற பின் சில பெயர்களில் டூல்கிட் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

இதற்கிடையே தேச துரோக வழக்கில் கைதாகியுள்ள திஷா ரவி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவர் குடும்பத்தினரை சந்தித்து பேசவும், வக்கீலுடன் பேசவும், எப்ஐஆர் நகலை பெறவும் நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திஷா கைது விவகாரத்தில் அனைத்தும் சட்டப்படியே நடந்துள்ளதாக டெல்லி போலீஸ் கமிஷனர் வத்சவா கூறி உள்ளார்.

மீட்டிங்கில் பங்கேற்றதை ஒப்புக்கொண்ட நிகிதா

ஜனவரி 11ம் தேதி நடந்த காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் ஜூம் மீட்டிங்கில் பங்கேற்றதை, தேடப்பட்டு வரும் மும்பை பெண் வக்கீல் நிகிதா ஜேக்கப் ஒப்புக் கொண்டுள்ளார். அவர் மும்பை போலீசாருக்கு தனது வக்கீல் மூலம் அனுப்பிய கடிதத்தில், ‘விவசாயிகள் போராட்டம் பற்றி வெளிநாட்டவர்கள் தெரிந்து கொள்வதற்கான உருவாக்கப்பட்டதே அந்த டூல்கிட். இது வெறும் தகவலுக்காக உருவாக்கப்பட்டதை தவிர வேறெந்த உள்நோக்கமும் இல்லை. ஜனவரி 11ம் தேதி நடந்த ஜூம் மீட்டிங்கில் பங்கேற்றது உண்மை. ஆனால், அதில் மதம், அரசியல், நிதி திரட்டும் நோக்கமோ, டிவிட்டரில் புயலை கிளப்ப வேண்டுமென்ற எந்த நோக்கோ இல்லை,’ என கூறியுள்ளார்.

பாஜ அமைச்சர் மீது வழக்கு

திஷா கைது விவகாரத்தில் பலர் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பாஜ தலைவர்கள் கைதை நியாயப்படுத்தி வருகின்றனர். அரியானா மாநில அமைச்சர் அனில் விஜ் தனது டிவிட்டரில், ‘‘தேச விரோத விதை யாருடைய மனதில் இருந்தாலும் அதை அழித்துவிட வேண்டும். அது திஷா ரவியாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி” என குறிப்பிட்டார். இந்த டிவிட் குறித்து ஜெர்மனியில் இருந்து புகார் வந்தததை தொடர்ந்து டிவிட்டர் ஆய்வுக்கு உட்படுத்தியது. பின்னர் விஜ் பதிவில் எந்த விதிமுறை மீறலும் இல்லை என டிவிட்டர் விளக்கம் அளித்தது. இந்நிலையில், கர்நாடகாவை சேர்ந்த சில சமூக ஆர்வலர் அமைப்புகள் அமைச்சர் விஜ் பதிவுக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்தன. இந்த புகார் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து பதிலளித்த அமைச்சர் விஜ், ‘‘வழக்கை பார்த்து பயப்படமாட்டேன். பதிலளிப்பேன்’’ என்றார்.

Tags : zoom meeting ,Republic Day , Farmers, Struggle, ‘Toolkit’
× RELATED சர்வதேச மகளிர் தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்டு கொண்டாடிய கூகுள்!!